2014 இற்குப் பின் முதல் முறையாக புதுடெல்லி செல்கிறார் மகிந்த

ஆட்சியை இழந்த பின்னர் முதல் முறையாக சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச இந்தியத் தலைநகர் புதுடெல்லிக்கு வரும் செப்ரெம்பர் மாதம் 12ஆம் நாள் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

பாஜகவின் முக்கிய பிரமுகரான நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரமணியன் சுவாமியின் அழைப்பின் பேரிலேயே, மகிந்த ராஜபக்ச இந்தப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.

புதுடெல்லியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டம் ஒன்றில் இந்திய- சிறிலங்கா உறவுகள் மற்றும் தெற்காசியாவில் அமைதி மற்றும் பாதுகாப்பு பற்றி மகிந்த ராஜபக்ச உரையாற்றவுள்ளார்.

மகிந்த ராஜபக்சவின் பயணத்துக்கான திட்டத்தை இறுதி செய்வதற்காக, குழுவொன்றை சுப்ரமணியன் சுவாமி விரைவில் கொழும்புக்கு அனுப்பி வைக்கவுள்ளார்.

அத்துடன், புதுடெல்லியை தளமாக கொண்டு செயற்படும், அனைத்துலக ஊடகவியலாளர்களின் அமைப்பான, தெற்காசிய வெளிநாட்டு செய்தியாளர் சங்கமும், மகிந்த ராஜபக்சவுடனான கலந்துரையாடல் ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

சிறிலங்கா அதிபராக மகிந்த ராஜபக்ச இருந்த போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்வுக்காக 2014 மே மாதம், கடைசியாக புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார்.

அதற்குப் பின்னர், மகிந்த ராஜபக்ச ஆட்சியை இழந்த பின்னர், மும்பை, பெங்களூர் மற்றும் திருப்பதிக்கு பயணம் மேற்கொண்டிருந்த மகிந்த ராஜபக்ச புதுடெல்லிக்கு பயணம் மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!