நாட்டை வங்குரோத்துக்கு கொண்டு சென்றவர்களுக்கு சர்வதேசம் ஒத்துழைப்பு வழங்காது!

நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டு சென்றவர்களுக்கு சர்வதேசம் ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்காது. 20ஆவது திருத்தத்தினால் சுப்பர் மான் ஆக உருவாக்கப்பட்டவர் நாட்டை சீரழித்து வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று தற்போது வெட்கமில்லாமல் அரச வரப்பிரசாதங்களை பெற்று ஓய்வு எடுக்கிறார் என எதிர்க்கட்சிகளின் பிரதம கோலாசான் லக்ஷ்மன் கிரியெல்ல சபையில் தெரிவித்தார்.

ஜனநாயகம், மனித உரிமைகள் ஆகியவற்றை கருத்திற் கொண்டு அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் கொண்டு வரப்படவில்லை. சர்வதேசத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதற்காகவே திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

நாடு சீரழிந்து விட்டது. ஆகவே நாட்டுக்காக 22ஆவது திருத்தத்துக்கு ஆதரவு வழங்குவோம் எனவும் குறிப்பிட்டார். அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூல வரைபின் இரண்டாம் வாசிப்பின் மீதான விவாதத்தின் போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டார்.

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நீதியமைச்சர் அரசியலமைப்பு திருத்தம் பற்றி தெளிவுப்படுத்தினார். அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் கொண்டு வந்த போது அதன் குறைபாடுகளையும்,ஏற்படும் விளைவுகளையும் எடுத்துரைத்தோம்.

ஆனால் அரசாங்கம் அதனை பொருட்படுத்தாமல் தான்தோன்றித்தனமாக செயற்பட்டு பாராளுமன்ற முறைமைக்கு அப்பாற்பட்ட வகையில் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டது.
பாராளுமன்ற முறைமைக்கமைய அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் உருவாக்கப்படவில்லை.

முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்குகளுக்கு முன்னிலையானவர்கள் ஒன்றிணைந்து பாராளுமன்றத்துக்கு முரணான முறையில் அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூல வரைபை தயாரித்து அதனை சபைக்கு சமர்ப்பித்தார்கள். அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் பாராளுமன்ற கோட்பாடுகளுக்கு எதிராக கொண்டு வரப்பட்டது.இது சரியா என்பதை நீதியமைச்சரே குறிப்பிடுங்கள்.

நீங்களும் 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்தீர்கள். அரசியல் கட்சியின் நோக்கத்துக்கமைய அரசியலமைப்பை திருத்தம் செய்ய முடியாது.பொது கொள்கையின் அடிப்படையில் மாத்திரம் தான் அரசியலமைப்பு திருத்தம் செய்யப்பட வேண்டும். அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்தவர்கள், 20ஆவது திருத்தத்துக்கும் ஆதரவாக வாக்களித்தார்கள்.

தற்போது 20ஆவது திருத்தத்தை விமர்சிக்கிறார்கள். இது என்ன பைத்தியகாரதனம்,இது அருவருப்பாக உள்ளது.திரும்பும்,திரும்பும் பக்கம் கொள்கைகளை மாற்றிக் கொள்கிறார்கள்.
20ஆவது திருத்தச் சட்டமூல வரைபை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பித்த முன்னாள் நீதியமைச்சர் இன்று சபையில் இல்லை. தலைமறையாகி விட்டார். சபையில் இருப்பதற்கு கூட அவருக்கு துணிவும் இல்லை. அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டால் சர்வதேச ஒத்துழைப்புக்கு பாதிப்பு ஏற்படும் என்பதை ஆரம்பத்திலேயே குறிப்பிட்டோம்.

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தினால் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு, பொலிஸ் ஆணைக்குழு உள்ளிட்ட பல சுயாதீன ஆணைக்குழுக்களின் சுயாதீனத்தன்மை மலினப்படுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. 20ஆவது திருத்தத்தின் குறைப்பாடுகளை திருத்திக் கொள்வதற்காக அரசாங்கம் அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்தை நிறைவேற்ற எதிர்க்கட்சிகளின் ஆதரவை கோருகிறது.

ஆனால் அனைத்து அழிவுகளும் நேர்ந்து முடிந்து விட்டது. அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தில் முத்துறைகளின் அதிகாரங்களும் மட்டுப்படுத்தப்பட்டு குறுகிய நோக்கத்துடன் சுபர் மேன் என்பவரை ஆளும் தரப்பினர் உருவாக்கினார்கள். சுபர் மேன் என வர்ணிக்கப்பட்டவர் நாட்டின் விவசாயத்துறையை சீரழித்து பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தி நாட்டை விட்டு தப்பி சென்று தற்போதுஅரச சுகபோகத்துடன் அரசாங்கத்தின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் வெட்கமில்லாமல் வாழ்கிறார்.பாவத்திற்கு பரிகாரம் தேடுகிறார்கள்.

தற்போது ரூபாவுமில்லை,டொலருமில்லை,2019ஆம் ஆண்டு அரசாங்கத்தை கையளிக்கும் போது திறைசேரியில் சுமார் 7000மில்லியன் வெளிநாட்டு கையிருப்பு இருந்தது.குறுகிய காலத்தில் வெளிநாட்டு கையிருப்பு மோசடி செய்யப்பட்டது. இவர்கள் திருடர்கள்.அரசாங்கத்தை பாதுகாப்பதற்காக அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்துக்கு ஆதரவு வழங்கவில்லை.நாட்டை பாதுகாக்கவே இத்திருத்தத்துக்கு ஆதரவு வழங்குகிறோம்.

எந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும் சர்வதேசத்தின் ஒத்துழைப்பை ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வது அவசியமாகும். எமது பொறுப்பை நாட்டுக்காக நிறைவேற்றுவோம். 20ஆம் திருத்தத்துக்கு நாங்கள் முன்வைத்த 20 யோசனைகள் குறித்து அவதானம் செலுத்திருந்தால் நாடு இந்த நெருக்கடி நிலையை தற்போது தோற்றம் பெற்றிருக்காது.

நாட்டை முழுமையாக சீரழித்தவர்கள் இன்றும் திரைமறைவில் இருந்துக் கொண்டு குறுகிய நோக்கத்துடன் செயற்படுகிறார்கள். ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கு முன்னுரிமை வழங்கி 22ஆவது திருத்தம் கொண்டு வரப்படவில்லை,சர்வதேசத்தின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்வதற்காகவே 22ஆவது திருத்தச் சட்டமூல வரைபு கொண்டு வரப்பட்டது.
இந்த அரசாங்கத்தினால் எதனையும் இனி செய்ய முடியாது,விட்டு செல்லுங்கள் இந்த அரசாங்கத்துக்கு மக்களாணை கிடையாது.

நாட்டை வங்குரோத்து செய்வர்களுக்கு சர்வதேசம் ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்காது.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உரிய நேரத்தில் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றிருந்தால் தற்போதை நிலை ஏற்பட்டிருக்காது என முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

பௌத்தராக விட்டுக் கொடுக்க பழக வேண்டும்.தற்போது மீண்டும் எழுவதாக குறிப்பிடப்படுகிறது,சமல் ராஜபக்ஷ அவர்களே நீங்கள் மஹிந்த ராஜபக்ஷவுக்கு சகோதரர் தானே அவருக்கு சிறந்த ஆலோசனை வழங்குங்கள் என்றார்.
      

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!