வடக்கு வங்கிகளில் 100 மில்லியன் ரூபா – குறிவைக்கும் சிறிலங்கா பிரதமர்

வடக்கில் உள்ள வங்கிகளில் 100 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி வைப்புச் செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

” போர் முடிவுக்கு வந்த போதிலும், யாழ்ப்பாணம் பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையிலும், அரசியல் உறுதிப்பாடு இல்லாத நிலையிலுமே இருந்தது. இந்தப் பிரச்சினைகளுக்கு தற்போதைய அரசாங்கம் தீர்வு கண்டுள்ளது.

வடக்கில் உள்ள அனைத்து வங்கிகளிலும். 100 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி வைப்பிலிடப்பட்டுள்ளது. இதனை இந்தப் பிராந்தியத்தின் அபிவிருத்திக்கு முதலீடு செய்ய முடியும்.

பொருளாதாரத்தை வலுப்படுத்த, வடக்கிலுள்ள மக்கள் தமது சேமிப்புகளை முதலீடு செய்ய வேண்டும். சேமிப்புகளுக்கான வரியை விட, முதலீடுகளுக்கான வரி மிகவும் குறைவு.

போரினால் இந்தப் பகுதி பேரழிவைச் சந்தித்தது. மக்கள் தமது முதலீடுகளை இழந்தனர்.

முதலீடு தான் பொருளாதார அபிவிருத்தியை உருவாக்குகிறது. அதற்கான முயற்சியை நாம் எடுக்கிறோம்.

2015ஆம் ஆண்டுக்குப் பின்னர் புலம்பெயர்ந்தோர், பெருமளவு நிதியை அனுப்பியுள்ளனர். அதில் பெரும்பாலானவற்றை வங்கிகளில் மக்கள் சேமித்துள்ளனர்.

இந்த நிதி பிராந்தியத்தின் அபிவிருத்திக்காக பயன்படுத்தப்பட வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!