தேர்தலை பிற்போட்டால் நீதிமன்றம் செல்வோம்!

மாகாண சபை தேர்தலை காலவரையறையின்றி பிற்போட்டுள்ளதை போன்று உள்ளுராட்சி மன்றத் தேர்தலையும் பிற்போட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முயற்சிக்கிறார் திட்டமிட்ட வகையில் எதிர்வரும் ஆண்டு மார்ச் மாதம் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இல்லாவிடின் நீதிமன்றம் செல்வோம் என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.
   
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேர்தல் முறைமையை திருத்தம் செய்ய அவதானம் செலுத்தியுள்ளமை அவதானத்திற்குரியது.மாகாண சபைகள் தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளமைக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொறுப்புக் கூற வேண்டும்.

மாகாண சபைகள் தொடர்பான எல்லை நிர்ணய அறிக்கை 2018 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு 139 வாக்குகளினால் தோற்கடிக்கப்பட்டது.நல்லாட்சி அரசாங்கத்தில் உள்ளுராட்சிமன்றம் மற்றும் மாகாண சபைகள் அமைச்சராக பதவி வகித்த பைஸர் முஸ்தப்பா அறிக்கையை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பித்து, அவரும் அறிக்கைக்கு எதிராகவே வாக்களித்தார்.

இதனை தொடர்ந்து அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எல்லை நிர்ணய மீளாய்வு குழுவை அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நியமித்தார். 3 மாத காலத்திற்குள் மீளாய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ள போதும் இதுவரை அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை.மாகாண சபை தேர்தலை நடத்தாமலிருக்க நல்லாட்சி அரசாங்கம் முன்னெடுத்த சூழ்ச்சி வெற்றிப்பெற்றது.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நோக்கத்திற்கமைய மாகாண சபை தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை உரிய காலத்தில் நடத்துவதற்கு எவ்வித தடைகளும் கிடையாது.எதிர்வரும் ஆண்டு மார்ச் மாதம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளது.இவ்வாறான பின்னணியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேர்தல் முறைமை திருத்தம் செய்யப்பட வேண்டும் என குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!