இலங்கையில் அடையாளம் காணப்பட்ட குரங்கம்மை தொற்றாளர்! சுகாதார அமைச்சின் விசேட அறிவிப்பு

நெருங்கிய தொடர்பு மூலமே குரங்கு அம்மை நோய் பரவும், எனவே இலங்கையில் இருந்து இவ்வாறான தொற்றுக்குள்ளான ஒருவர் பதிவாகியிருப்பது தொடர்பில் அச்சம் கொள்ளத் தேவையில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் முதலாவது குரங்கு அம்மை தொற்றாளர் வியாழக்கிழமை அடையாளம் காணப்பட்டுள்ளார். 19 வயதுடைய இளைஞரான இவர், நவம்பர் 1ஆம் திகதி வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வந்துள்ளார்.

இவரின் உடல் நிலையில் சந்தேகம் ஏற்பட்டதால் மருத்துவர்கள் அவரது மாதிரிகளை 2ஆம் திகதி மருத்துவ ஆராய்ச்சி நிறவனத்திற்கு அனுப்பி, அந்த நபரை வைத்தியசாலையில் அனுமதிக்க ஏற்பாடு செய்தனர். அந்த நோயாளிக்கு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் மூலம் குரங்கு அம்மை தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தற்போது மருத்துவக் கண்காணிப்பில் அவர் நலமுடன் உள்ளார். அவரது நண்பர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

இது அச்சப்பட வேண்டிய விடயம் இல்லை. நம் நாட்டில் நோய்க் கட்டுப்பாட்டு அமைப்பு முறையாகச் செயல்படுகிறது. அதன் காரணமாகவே இந்த நோயாளிகளையும் அடையாளம் காண முடிந்தது.

இதற்காக மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளுக்கான அனைத்து வசதிகளும், மருந்துகளும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்ளன. கோவிட் வைரஸைப் போல இந்த வைரஸ் தொற்று நோய் அல்ல.தனிமைப்படுத்தல், விமான நிலையத்தை சுத்தம் செய்தல் மற்றும் கடைகளை மூட வேண்டிய அவசியமில்லை என தெரிவித்துள்ளார்.   

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!