கந்தகாடு சம்பவம் தொடர்பில் விரிவான அறிக்கையை கோரும் ஜனாதிபதி

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் ஏற்பட்ட சம்பவம் தொடர்பில் விரிவான அறிக்கையை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

அதேவேளை ஜனாதிபதி, நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்சவுடன் நடத்திய கலந்துரையாடலின் பின்னர் இப்படியான சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் நேற்றிரவு இரண்டு தரப்புக்கு இடையில் மோதல் ஏற்பட்டது.
ஆயுத களஞ்சியத்திற்குள் நுழைய முயற்சித்த கைதிகள்

அப்போது புனர்வாழ்வு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் ஆயுத களஞ்சியத்திற்குள் நுழைய முயற்சித்துள்ளதாக இராணுவப்பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் தெரிவித்துள்ளார்.
இதன் போது ஏற்பட்ட பதற்றத்தை தணிக்க இராணுவத்தினர் வானத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் செய்துள்ளனர்.

இதன் போது ஒரு கைதிக்கும் இராணுவ வீரர் ஒருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளதுடன் அவர்கள் பொலன்நறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.எது எப்படி இருந்த போதிலும் புனர்வாழ்வு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 50 முதல் 100 கைதிகள் தப்பிச் சென்றுள்ளதுடன் அவர்களை கைது செய்ய இராணுவத்தினர் விசேட தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.பிரதேசத்தில் நிலைமையை கட்டுப்படுத்த பொலிஸாரின் உதவி கோரப்பட்டுள்ளது எனவும் இராணுவப்பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார். 

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!