அரசாங்கத்தின் செயற்பாடுகளை கண்டிக்கும் கர்தினால் மல்கம் ரஞ்சித்

பயங்கரவாதத் தடைச் சட்ட நடைமுறை மற்றும் அதனை எதிர்த்து போராடுவோரை கைது செய்யும் அரசாங்கத்தின் செயற்பாடுகளை கர்தினால் மல்கம் ரஞ்சித் கண்டித்துள்ளார். செய்திக் குறிப்பொன்றில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.  அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் பரவி வரும் கையூட்டல் மற்றும் ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்கும், அமைதியான போராட்டங்களை நடத்தும் மனித உரிமைகளுக்கான போராட்டத் தலைவர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களுக்கு எதிராக, கொடூரமான மற்றும் சகிக்க முடியாத அடக்குமுறையை அரசாங்கம் பிரயோகித்து வருகின்றது.

அரசியலமைப்பின் மூலம் அனைத்து குடிமக்களுக்கும் உத்தரவாதம் அளித்துள்ள பேச்சு சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் மற்றும் அமைதியான போராட்டங்களை நடத்துதல் ஆகியவற்றை ஆணவத்துடன் அரசாங்கம் தொடர்ந்து நசுக்கி வருகிறது.

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பிக்கு சம்மேளன ஒருங்கிணைப்பாளர் கல்வௌ சிறிதம்ம தேரர் ஆகியோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையை ஏற்றுக்கொள்ள முடியாது.

அவர்கள் இருவரும் இப்போது 75 நாட்களுக்கும் மேலாக, தெளிவான குற்றச்சாட்டுகள் எதுவும் சுமத்தப்படாமல் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.இந்த இருவரினதும் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை எந்தவித தீவிர உணர்வும் இன்றி விடுதலை செய்யுமாறு சட்டமா அதிபர் திணைக்களத்தினால் பரிந்துரை விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை வெளியிட அரசாங்கம் தொடர்ந்து மறுப்பதை வெட்கப்பட வேண்டிய, நேர்மையற்ற செயல்.உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களில் 272 அப்பாவி மக்களின் உயிர்கள் பறிக்கப்பட்டதுடன் 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர், சிலர் உயிருக்கு ஊனமுற்றுள்ளனர்.இந்த நிலையில் அவர்களின் இரத்தம் நீதிக்காக சுவர்க்கத்தை நோக்கி அழுகிறது என குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!