ஹிருணிகா பிரேமசந்திர கைது

ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் அணித் தலைவி ஹிருணிகா பிரேமச்சந்திர சற்றுமுன் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் கொழும்பில் வீதி நாடகத்தில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கறுவாத்தோட்ட பொலிஸார் அவர்களை கைது செய்துள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். 

நான்காம் இணைப்பு

கொழும்பு – கறுவாத்தோட்ட பொலிஸ் நிலையத்தில் தற்போது அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
குறித்த பொலிஸ் நிலையத்தில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ஹிருணிக்கா உள்ளிட்ட குழுவினருக்கும், பொலிஸாருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்று வருவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். 

மூன்றாம் இணைப்பு
கொழும்பில் பொலிஸாரை போன்று உடையணிந்து வீதிநாடகம் மேற்கொண்ட இருவரை கறுவாத்தோட்ட பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த நிலையில் ஹிணிக்கா உள்ளிட்ட குறித்த பெண்கள் குழுவினர் அனைவரும் பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்து பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், தம்மையும் கைது செய்யுமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்காரணமாக அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.  இதனை தொடர்ந்து வீதிநாடகத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்யுமாறு வலியுறுத்தி பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக அமர்ந்து அதில் கலந்து கொண்ட பெண்கள் அனைவரும் அமைதி போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.


இரண்டாம் இணைப்பு
கொழும்பு – மாகமசேகர மாவத்தை பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
குறித்த இடத்தில் வீதி நாடகம் செய்ய வேண்டாம் என பொலிஸார் அறிவுறுத்திய நிலையில் அதனை மீறி ஹிருணிக்கா உள்ளிட்ட குழுவினர் வீதி நாடகத்தை மேற்கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமையால் அங்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.  அத்துடன் அறிவுறுத்தலை மீறி நடந்து கொண்டதாக தெரிவித்து பெண்ணொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். 

முதலாம் இணைப்பு
நாட்டில் தற்போதுள்ள பிரதான பிரச்சினைகள் அதிலும் குறிப்பாக பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கொழும்பில் வீதி நாடகங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.  குறித்த நடவடிக்கை இன்றைய தினம் கொழும்பிலுள்ள ஐ.நா. காரியாலயத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.இதனை ஐக்கிய மக்கள் சக்தியின் மக்கள் அணியின் மகளிர் அணியினர் முன்னெடுத்துள்ளனர்.

இதில் பெண்கள் அதிகளவானோர் செம்மஞ்சள் நிற உடை மற்றும் செம்மஞ்சள் நிற பட்டி தலையில் அணிந்து, செம்மஞ்சள் நிற கொடிகளை ஏந்திய வண்ணம் கலந்து கொண்டுள்ளதுடன், ஹிருணிக்கா பிரேமசந்திரவும் கலந்து கொண்டுள்ளார். இதேவேளை அப்பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். 

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!