நாணய நிதியத்தின் சகல நிபந்தனைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன-விஜித ஹேரத்

நிதியமைச்சரான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று தாக்கல் செய்த வரவு செலவுத்திட்டம் சர்வதேச நாணய நிதியத்தின் தேவைக்கு அமைய முன்வைக்கப்பட்டுள்ள பொம்மை வரவு செலவுத்திட்டம் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் குற்றம் சுமத்தியுள்ளார்.
2023 ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டம் தொடர்பாக கருத்து வெளியிடும் போதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
வரவு செலவுத்திட்டம் நாட்டின் பொருளாதார பிரச்சினையை தீர்க்காது
Wijitha Herath-விஜித ஹேரத்

வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக சர்வதேச நாணய நிதியத்தின் அனைத்து நிபந்தனைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன. வரி அறவீடுகளின் மூலம் பணத்தை பெறுவது வரவு செலவுத்திட்டத்தின் அடிப்படை இலக்கு.

இது மக்களை மேலும் பாதிப்புக்கு உள்ளாகும். நாட்டு மக்கள் எதிர்நோக்கியுள்ள பொருளாதார பிரச்சினைகள் இந்த வரவு செலவுத்திட்டத்தின் மூலம் எந்த வகையிலும் தீர்க்கப்படாது. மக்களை பாதிப்புக்கு உள்ளாக்குவதை தவிர நாட்டை கட்டியெழுப்ப அரசாங்கத்திடம் எந்த மாற்று முறைகளும் இல்லை.

அடுத்தாண்டுக்கான அரசின் செலவுகள் 8 ஆயிரம் பில்லியன் ரூபா என்ற நிலையில், வருமானம் 3 ஆயிரத்து 500 பில்லியன் ரூபா என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதில் வரி வருமானம் மாத்திரம் 3 ஆயிரத்து 300 பில்லியன் ரூபா.

இப்படியான நிலைமையில், கடனை பெறுவது மக்கள் மீது வரி சுமையை சுமத்துவதை தவிர மக்களுக்கு நிவாரணம் வழங்கும் மாற்று வழிகள் அரசாங்கத்திடம் இல்லை. இந்த வரவு செலவுத்திட்டத்தின் பிரதிபலன்களை எதிர்காலத்தில் மக்கள் அனுபவிக்க நேரிடும். வரவு செலவுத்திட்டத்தின் மூலம் நாட்டின் பிரச்சினைகளை தீர்க்க அரசாங்கத்திடம் திட்டமில்லை என்பது தெளிவாக புலப்பட்டுள்ளது எனவும் விஜித ஹேரத் மேலும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!