பொருளாதார பாதிப்பிற்கு கப்ரால்,ஜயசுந்தரவே பொறுப்புக் கூற வேண்டும்!

பொருளாதார பாதிப்பிற்கு அஜித் நிவார்ட் கப்ரால்,பி.பி ஜயசுந்தர ஆகியோர் பொறுப்புக் கூற வேண்டும் என நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.
    
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வரவு செலவுத் திட்டத்தின் மீதான முதல் நாள் விவாதத்தின் போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நிவாரணம் வழங்குவதை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படவில்லை என்பதை கட்சி பேதமின்றி ஏற்றுக்கொள்கிறோம்.

நாடு தற்போது எதிர்க்கொண்டுள்ள நெருக்கடியான நிலையில் இருந்து மீள்வதற்கான ஒரு ஆரம்பமாக வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அரசியல் மற்றும் பொருளாதார ஸ்தீரத்தன்மை உறுதிப்படுத்தப்பட வேண்டும். ஒரு தனி நபர் தன்னிச்சையாக எடுத்த தீர்மானங்கள் பொருளாதார பாதிப்பை தீவிரப்படுத்த நாட்டி இந்த நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. ஆகவே தனிநபரின் அதிகாரத்தை மட்டுப்படுத்தி,பாராளுமன்றத்தின் கூட்டுப்பொறுப்பை ஏற்படுத்தும் சூழல் அரசியலமைப்பு திருத்தம் ஊடாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

அரசியலமைப்பு பேரவைக்கு மூன்று சிவில் உறுப்பினர்களை சபாநாயகர், பிரதமர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஒன்றிணைந்து தெரிவு செய்து, நியமிக்க வேண்டும். சிவில் உறுப்பினர் நியமனம் தொடர்பில் சபாநாயகர் சபைக்கு அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன்.
நாடு இன்று எதிர்க்கொண்டுள்ள இக்கட்டான நிலைக்கு 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் பொறுப்புக் கூற வேண்டும் என நாட்டு மக்கள் விமர்சிப்பது நியாயமானது. சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டம் நிதியமைச்சினால் தயாரிக்கப்பட்டது, வரவு செலவுத் திட்டம் தொடர்பான விடயங்களை நாட்டு மக்கள் தெரிந்துக் கொள்ளும் வகையில் பாராளுமன்றத்தில் ‘சுயாதீன வரவு செலவுத் திட்ட காரியாலம் ‘ஒன்றை ஸ்தாபிக்குமாறு 2007ஆம் ஆண்டு முதல் வலியுறுத்தி வருகிறேன்.

இதுவரை அந்த காரியாலயம் ஸ்தாபிக்கப்படவில்லை.எதிர்வரும் ஓரிரு மாதங்களில் பாராளுமன்ற சுயாதீன வரவு செலவுத் திட்ட காரியாலயத்தை ஸ்தாபிக்க எதிர்பார்த்துள்ளோம். அரசியல் பரிந்துரைகளுடன் தவறான நபர்கள் அரச உயர் பதவிகளுக்கு நியமிக்கப்பட்டதால் நாடு இன்று மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்க்கொண்டது. 2006ஆம் ஆண்டு மத்திய வங்கியின் ஆளுநராக அஜித் நிவார்ட் கப்ராலை நியமிக்கும் போது கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தேன்.
தற்போதைய பொருளாதார பாதிப்புக்கு மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால்,ஜனாதிபதியின் முன்னாள் செயலாளர் பி.பி.ஜயசுந்தர ஆகியோர் பொறுப்புக் கூற வேண்டும்.

அரச வருமானத்தில் வரி வருமானம் பெரும் பங்கு கொண்டுள்ளது. இலங்கை சுங்க திணைக்களத்தின் ஊடாக அரச வருமானத்திற்கு 50 அல்லது 60 சதவீத வருமானம் கூட கிடைக்கப் பெறுவதில்லை. நாட்டில் பொதுவான மற்றும் நிலையான வரி கொள்கை கிடையாது. வகுக்கப்படும் வரி கொள்கை 15 அல்லது 20 வருட காலங்களுக்காவது கடைப்பிடிக்க வேண்டும்.

ஊழல் மோசடி தற்போதைய பொருளாதார பாதிப்பு பிறிதொரு காரணியாகும். அரசாங்கத்தின் அனைத்து விடயங்களிலும் மோசடி காணப்படுகிறது. ஜனாதிபதி நியமனம்,பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளுராட்சி உறுப்பினர் நியமனம் என்ற அனைத்திலும் ஊழல் மோசடி உள்ளது. அதே போல் முக்கிய அரச நிறுவனங்களில் மோசடி மிகையாகவுள்ளன.

2019ஆம் ஆண்டு வரிச் சலுகை வழங்கப்பட்டமை பாராளுமன்றத்திற்கு முன் கூட்டியதாக அறிவிக்கப்படவில்லை. வரி சலுகையினால் 600 மில்லியன் ரூபா வரி வருமானத்தை அரசாங்கம் இழந்தது.வரி வருமானம் இழக்கப்பட்டால் பொருளாதார பாதிப்பு ஏற்படும் என்பதை சிறுபிள்ளை கூட அறியும், ஆனால் அரசாங்கம் அறியாமல் இருந்தமை வேடிக்கையானது. ஊழல் மோசடிக்கு எதிரான சட்டம் வெகுவிரைவில் பராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படும்.

கறுப்பு சந்தை வர்த்தகர்கள் அரசாங்கத்தை நிர்வகிக்கும் போது முறைகேடான சம்பவங்களே இடம் பெறும் முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவை கறுப்பு சந்தை வர்த்தகர்கள் ஆக்கிரமித்திருந்தார்கள். கறுப்புச் சந்தை வர்த்தகர்களுக்கு அடிபணிந்துள்ள அரசியல்வாதிகளை கொண்டு நாட்டை முன்னேற்ற முடியாது.தேர்தலுக்கு போட்டியிட முன்னர் அரசியல்வாதிகள் தமது சொத்து விபரங்களை பகிரங்கப்படுத்துவது தொடர்பான சட்டம் இயற்றப்படும்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொண்டும் முன்னேற்றமடையவில்லை என எதிர்க்கட்சியின் உறுப்பினர் விஜித ஹேரத் குறிப்பிட்டமை நியாயமானதே.சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை 16 முறை பெற்றுக்கொண்டுள்ளோம்.பெற்றுக்கொண்ட நிதியை சேவை பொருளாதாரத்திற்கு செலுத்தியதால் பொருளாதாரத்தை முன்னேற்ற முடியவில்லை.ஆகவே தற்போதைய நெருக்கடியான நிலையை ஒரு படிப்பினையாக கொண்டு செயற்படுவது அனைவருக்கும் சாதகமாக அமையும் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!