5 ஆயிரம் ரூபா கொடுப்பனவை குறைப்பதற்கு அரசாங்கம் முயற்சி! சாள்ஸ் நிர்மலநாதன் குற்றச்சாட்டு

அங்கவீனர்களுக்காக ஒவ்வொரு மாதமும் வழங்கப்பட்டு வந்த 5000 ரூபா கொடுப்பனவை 2500 ரூபாவாக குறைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் குற்றம்சுமத்தியுள்ளார். 

இதேபோன்று பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டு இருப்பதால் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை எதிர்க்கும் மனநிலையில் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மன்னாரில் வைத்து நேற்றைய தினம் (19.11.2022) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், தற்போது 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை ஜனாதிபதியும், நிதி அமைச்சருமான ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருக்கிறார்.
இன்று இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்படுவதற்கு முதல் காரணம் 1956ஆம் ஆண்டு தனிச் சிங்களச் சட்டம் கொண்டு வந்து இனவாத கருத்துக்களோடு ஆட்சியாளர்கள் பயணித்ததன் காரணமாக இன்று இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டிருக்கின்றது.


1956ல் தனிச் சிங்களச் சட்டம் கொண்டு வந்த போது சிங்கள மக்கள் அதை எதிர்த்து தடுத்திருந்தால் இன்று சிங்கப்பூர் இலங்கையிடம் கடன் கேட்கின்ற நிலமைக்கு வளர்ந்திருக்கும். ஆகவே அடிப்படை பிரச்சினை அங்கிருந்து தான் உருவாகியுள்ளது.

இப்படியான சூழலில் தற்போது இந்த பொருளாதார நெருக்கடியின் மத்தியில் ஜனாதிபதி வரவு செலவு திட்டம் முன்மொழிந்தது மக்களின் வாழ்க்கைச் சுமையை குறைப்பதற்கு பொருத்தமாக அமையவில்லை.

இந்த வரவு செலவு திட்டத்தில் பல அமைச்சுக்களுக்கு நிதிகள் முன்மொழியப்பட்டு இருந்தாலும் இலங்கையின் வருமானம் அதில் சரியாக குறிக்கப்படவில்லை.குறிப்பாக அங்கவீனர்களுக்கு ஒவ்வொரு மாதமும் வழங்கப்பட்டு வந்த 5000ரூபா பணத்தைக் கூட 2500 ரூபாவாக குறைப்பதற்கு இந்த அரசு முயற்சித்து வருகிறது.

இதே போன்று பல அதிருப்தியான விடயங்கள் இந்த வரவு செலவு திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. எனவே வரவு செலவு திட்டத்தில் கட்சி முடிவெடுக்கவில்லை.
எனது தனிப்பட்ட கருத்தாக இந்த வரவு செலவு திட்டத்தை எதிர்க்கும் மனநிலையில் தான் நான் இருக்கிறேன் என தெரிவித்துள்ளார். 

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!