ராஜபக்ச அரசாங்கத்தில் இருந்து வெளியேற காரணம் என்ன?- காலம் கடந்து மனம் திறக்கும் மைத்திரி

மக்கள் அறியாத பல விடயங்கள் அடங்கிய நூல் ஒன்றை தான் எழுதி இருப்பதாகவும் அந்த நூலை எதிர்வரும் ஜனவரி மாதம் வெளியிட எதிர்பார்த்துள்ளதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான  மைத்திரிபால சிறிசேன  தெரிவித்துள்ளார்.

கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தொழில்சார் நிபுணர்கள் சங்கத்தின் கருத்தரங்கொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மிகவும் மனவருத்தமடைய செய்த பல காரணங்கள் இருக்கின்றன

மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தில் இருந்து நான் அன்று விலகியமை சம்பந்தமாக பலர் பல்வேறு வகையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தாலும் அப்படியான தீர்மானத்தை எடுப்பதற்கான மிகவும் மனவருத்தமடைய செய்த பல காரணங்கள் இருக்கின்றன.

மக்கள் இதுவரை அறிந்திராத விடயங்களுடன் கூடிய நூல் வெளியான பின்னர் எனக்கு என்ன நடக்கும் என்பது தெரியவில்லை. நான் சுற்றாடல் அமைச்சராக இருந்த போது 2007 ஆம் ஆண்டும் முதலாவது சம்பவத்தை எதிர்நோக்கினேன்.

கடந்த காலங்களில் இலங்கை இருக்காத ஒருவரின் டென்டரில் கையெழுத்திட மறுத்ததால் அந்த சம்பவம் நடந்தது. அன்று முதல் எனக்கும் ராஜபக்ச அரசாங்கத்திற்கும் இடையில் பிரச்சினைகள் ஏற்பட ஆரம்பித்தன.

அன்றைய பிரதமர் டி.எம். ஜயரத்ன தலைமையிலும் எனது தலைமையிலும் நடந்த ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில், அதிவேக நெடுஞ்சாலைகள் நிர்மாணிப்பதில் நடக்கும் ஊழல், மோசடிகள் தொடர்பில் சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் பற்றி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பேசினார்.

மறுநாள் நான் அலரி மாளிகைக்கு அழைக்கப்பட்டேன். அங்கு ஏனைய நாட்களில் காணாததை விட ஆத்திரமடைந்த முகம் ஒன்றை பார்த்தேன். நேற்று ஊழல், மோசடிகள் பற்றி பேசப்பட்டதா என ஆத்திரமடைந்த முகத்துடன் என்னிடம் கேள்வி எழுப்பபட்டது.

நான் இல்லை என்று கூறினேன். வீதி நிர்மாணிப்புகளில் அதிகளவில் ஊழல், மோசடிகள் நடப்பதாக பேசப்பட்டதாக எனவும் வினவப்பட்டது. நான் இல்லை என்று மீண்டும் கூறினேன்.
இவர் கூறவில்லையா என அங்கு இருந்த முதல் நாள் கூட்டத்திற்கு வந்திருந்த பி.பீ. ஜயசுந்தரவிடம் கேள்வி எழுப்பபட்டது. அமைச்சர் அப்படி கூறினாரா என்பது தனக்கு நினைவில்லை என்று ஜயசுந்தர கூறினார்.

என்னை நோக்கி விரலை நீட்டி, அமைச்சர் மற்றும் கட்சியின் செயலாளருக்கு ஊழல், மோசடிகள் பற்றி பேச முடியாது எனக்கூறினார். அப்படி செய்தால், இரண்டு பதவிகளையும் வகிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து அங்கிருந்தால், மேலும் சிலவற்றை கேட்க நேரிடும் என்று நான் எனது வீட்டுக்கோ அமைச்சுகோ சென்று விட்டேன். அது என்னை மிகவும் மனவருத்தமடைய செய்த சம்பவம் எனவும் மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார். 

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தான் ஜனாதிபதி பதவி வகித்த காலத்தில் அலரி மாளிகையிலேயே வசித்து வந்தார். கட்சியினர் உட்பட அனைவரையும் அங்கு அழைத்தே அவர் பேச்சுவார்த்தைகளை நடத்துவார் என்பது குறிப்பிடத்தக்கது. 

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!