தேசபந்து தென்னகோனைக் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கோரி மனு தாக்கல்

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் (SDIG) தேசபந்து தென்னகோனைக் கைது செய்து அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2022 மே 09 அன்று காலிமுகத்திடலில் “கோட்டகோகம” எதிர்ப்புத் தளம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பிலேயே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ‘அறகலய’ போராட்ட இயக்கத்திற்கு ஆதரவான சட்டத்தரணி ராமலிங்கம் ரஞ்சன், சட்டமா அதிபர், பொலிஸ் மா அதிபர், குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் மற்றும் தேசபந்து தென்னகோன் ஆகியோரை பிரதிவாதிகளாக பெயரிட்டு இந்த மனுவை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

2022 மே 09ஆம் திகதி காலிமுகத்திடலில் ‘அறகலய’ போராட்ட இயக்கத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் தேசபந்து தென்னக்கோனை சந்தேகநபராக பெயரிடுவதற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளதை கோட்டை நீதவான் நீதிமன்றமும் அவதானித்துள்ளதாக மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார். இருந்த போதிலும், சம்பவத்தில் சந்தேகநபராகப் பெயரிட்டு, அவரைக் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்த இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே தேசபந்து தென்னகோனை சந்தேகநபராக பெயரிட சட்டமா அதிபர், பொலிஸ் மா அதிபர் மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் ஆகியோருக்கு ரிட் உத்தரவை பிறப்பிக்குமாறு மனுதாரர் தரப்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும், தென்னகோனைக் கைது செய்யுமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவின் தலைவர் மற்றும் பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிடுமாறும், அவரைத் தடுத்து வைத்து மேலதிக வாக்குமூலங்களைப் பெறுவதற்கு விசாரணை நடத்துமாறும் மனுவில் கோரப்பட்டுள்ளது.
அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு அறிவிக்க, பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிடுமாறும் மனுவில் நீதிமன்றிடம் கோரப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!