புனித பௌத்தம் போஷித்த நாகரீகத்தை அழிக்க இடமளிக்க முடியாது-கொழும்பு பேராயர்


வெளிநாடுகளில் படித்தவர்கள் மற்றும் வாழும் பறங்கியர் கூறுகின்றனர் என்பதற்காக இரவு வாழ்க்கை, இரவு நேர களியாட்ட விடுதிகள், கெசினோ, கஞ்சா போன்றவற்றை இலங்கையின் கலாசாரத்திற்குள் சேர்க்க இடமளிக்க முடியாது என கத்தோலிக்க திருச்சபையின் கொழும்பு பேராயர் வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

நீர்கொழும்பு குரண புனித பேருது கல்லூரியில் நிர்மாணிக்கப்பட்ட மூன்று மாடி கட்டடத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே பேராயர் இதனை கூறியுள்ளார்.
நாட்டின் கலாசாரத்தை அழிக்க இடமளிக்க முடியாது

புனிதமான பௌத்த மதத்தால் போஷிக்கப்பட்ட நாட்டின் நாகரீகம் மற்றும் கலாசாரத்தை அழிக்க அவர்களுக்கு இடமளிக்க முடியாது. இப்படியான முட்டாள் வேலைகளுக்கு இடமளிக்க வேண்டாம் என பௌத்த தேரர்கள் உட்பட சமய தலைவர்களிடம் கோரிக்கை விடுக்கின்றேன். சர்வதேச நாணய நிதியம் அல்லது உலக வங்கி கூறுகின்றன என்பதற்காக நாட்டுக்கு பொருந்தாத சட்டத்தை நடைமுறைப்படுத்துவது பிச்சை எடுத்து சாப்பிடுவதை போன்றது.

சில அரசியல்வாதிகள் இலங்கையை விற்றேனும் சாப்பிட்டு, குடித்து வாழலாம் என நினைத்து, வெளிநாட்டு நிறுவனங்களிடம் நாட்டின் பங்குகளை வழங்கி வருகின்றனர்.
உயர் மட்டம் முதல் கீழ் மட்டம் வரை ஊழலுக்கு அமையாகியுள்ளனர்

அதிகாரம், பதவியை பாதுகாத்துக்கொள்ள நாட்டை பயன்படுத்த வேண்டாம் என சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டுக்கொள்கிறேன். நாட்டின் உயர் மட்டத்தில் இருந்து கீழ் மட்டம் வரை உள்ளவர்கள் ஊழலான முறைகளுக்கு அடிமையாகியுள்ளனர்.

ஒரு புறம் போதைப் பொருளை வைத்திருப்பவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படும் என கூறி, மறுபுறம் கஞ்சா பயிரிட இடமளிக்கின்றனர். நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமாயின் நாட்டுக்குள் சிந்தனை ரீதியான முழுமையான புரட்சி ஏற்பட வேண்டும் எனவும் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மேலும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!