ஆட்சியில் இருப்பது ரணில் ராஜபக்ச அரசாங்கம்-பிரசன்ன ரணதுங்க

புதிய கூட்டணியின் ஊடாக எதிர்காலத்தில் எந்த தேர்தலாக இருந்தாலும் அவற்றில் போட்டியிட போவதாகவும் போட்டியிடும் சின்னம் தொடர்பில் தீர்மானிக்கப்படும் எனவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். பத்தரமுல்லையில் நடைபெற்ற வைபவத்தின் பின்னர், ஐக்கிய தேசியக்கட்சியுடன் கூட்டணி அமைக்கப்படுமா என அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்.
ஐ.தே.கட்சியுடன் கூட்டணி அமைப்பதில் பிரச்சினையில்லை

இதற்கு பதிலளித்த அவர் தற்போது ஆட்சியில் இருப்பது ரணில் ராஜபக்ச அரசாங்கம் என கூறியுள்ளார். இரண்டு தரப்பும் மிகவும் அனுபவமிக்க அணிகள். இதனால், கூட்டணி அமைப்பதில் பிரச்சினையில்லை. மேலும் சில அரசியல் கட்சிகளை இந்த கூட்டணியில் இணைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றோம். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்கனவே அரசியல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.

எதிர்காலத்தில் நடக்கும் எந்த தேர்தலாக இருந்தாலும் எதிர்கொள்ள தயார். எதிர்காலத்தில் எந்த தேர்தலாக இருந்தாலும் அதில் வெற்றி பெற முடியும் எனவும் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
கூட்டணி ஒன்றை அமைக்க போவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளமை தொடர்பிலும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர், இதற்கு பதிலளித்த அமைச்சர் எவரும் கூட்டணி அமைத்து அனைவரும் ஓரிடத்திற்கு வந்தால் நல்லது எனக்கூறியுள்ளார்.

மே மாதம் 9 ஆம் திகதி எரியூட்டப்பட்ட வீடுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்டுள்ளது. மே மாதம் 9 ஆம் திகதி இந்த சம்பவங்களை செய்தது மக்கள் விடுதலை முன்னணி மற்றும் முன்னிலை சோசலிசக் கட்சி ஆகியன. இவர்களால் நாட்டில் ஜனநாயக ரீதியாக ஆட்சிக்கு வர முடியாது. எம்மை தாக்கி, கொலை செய்து, விரட்டியடித்து விட்டு ஆட்சி அதிகாரத்தை உறுதிப்படுத்தும் தேவை இவர்களுக்கு இருக்கின்றது.

நாட்டு மக்கள் தற்போது இதனை புரிந்துக்கொண்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தினமும் வந்து உண்மையான நிலைமைகளை கூறி வருகின்றனர். இறுதியில் தூள்காரர்கள், கஞ்சா காரர்கள், விபச்சாரிகள் போராட்டத்தை கையில் எடுத்தனர். நான் நாடாளுமன்றத்தில் கூறியதை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தற்போது வெளியில் வந்து கூறுகின்றனர்.

மீண்டும் போராட்டத்திற்கு செல்ல வேண்டாம் எனக்கூறுகின்றனர். அமைதியான போராட்டகாரர்கள் அல்ல. அமைதியான போராட்டத்தை கைப்பற்றி நாட்டை அழித்தவர்கள் பற்றியே கூறுகின்றனர்.
மே 9 ஆம் திகதி சுமார் 800 வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர்கள இழப்பீட்டை எதிர்பார்க்கின்றனர். சிலர் இழப்பீட்டை பெற மாட்டார்கள்.

வீடுகளை தீயிட தூண்டி விட்டவர்கள் தற்போது புனிதர்கள் போல் பேசுகின்றனர். இந்த சம்பவங்களுடன் ஐக்கிய மக்கள் சக்திக்கும் தொடர்புள்ளது எனவும் பிரசன்ன ரணதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!