கேள்விகளுக்கு பதிலளிக்க நேரலைக்கு வந்த நாமலுக்கு இரங்கல் தெரிவித்த இணையவாசிகள்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நீண்ட நாட்களின் பின் தன்னுடைய முகப்புத்தகத்தின் ஊடாக நேரலையில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் வழங்கியிருந்தார். நாமல் ராஜபக்சவின் குறித்த நேரலையை பார்வையிட்ட இணையவாசிகள் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தும் முகமாக நாமல் ராஜபசவை திட்டி ஆழ்ந்த இரங்கல்கள் என தெரிவித்துள்ளனர்.

குறித்த கருத்துக்களை பார்வையிட்டவாறு பேசிய நாமல் ராஜபக்ச அதில் ஒரு சிலரின் கேள்விகளுக்கும் பதிலளித்தார். இந்தநிலையில், நாமல் ராஜபக்சவின் சகோதரரான ரோகித ராஜபக்ச அனுப்பிய ராக்கெட்டிற்கு என்ன ஆனது என ஒரு கேள்வி நேரலையில் எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த நாமல் ராஜபக்ச அந்த ரொக்கெட் தொடர்பாக கண்டி மாவட்டத்தில் உள்ள அது தொடர்பான நிறுவனத்திற்கு சென்றால் முழுவிபரங்களையும் தெரிந்து கொள்ள முடியும் எனவும், ரொக்கெட்டை மட்டும் தேடாமல் அந்த துறையில் உள்ள வேலைவாய்ப்புக்களையும் தேடி பயன்பெறுமாறும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய நாமல் ராஜபக்ச, காலிமுகத்திடல் போராட்டத்துடன் கைக்கோர்த்து, தமது வேலையை இழந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்களை, காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் கைவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

போராட்டம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில், போராட்டத்தில் இணைந்து போராடி, தமது வேலையை இழந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு, புதிய வேலைகளை பெற்று தருவதாக போராட்டக்காரர்கள் உறுதி வழங்கிய போதிலும், இன்று அவர்கள் நிர்க்கதிக்குள்ளாகியுள்ளதாக நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

போராட்ட காலத்தில் அனைவரும் ஒன்றாக இருந்ததை போன்று, போராட்டத்திற்கு பின்னரும் ஒன்றாக இருந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்றி நியாயத்தை பெற்றுக் கொடுக்குமாறும் நாமல் ராஜபக்ச, காலிமுகத்திடல் போராட்டக்காரர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.  

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!