எனக்கு சொந்தமாக ஒரு மோட்டார் சைக்கிள் கூட கிடையாது!

நீதிமன்ற தீர்ப்பிற்கமை 10 கோடி செலுத்தக் கூடிய பொருளாதார இயலுமை எனக்கு இல்லை. எனவே நாடளாவிய ரீதியிலுள்ள எனது ஆதரவாளர்களான மக்களிடமிருந்து பணத்தை சேகரித்து அதன் மூலம் நஷ்டஈட்டினை செலுத்த தீர்மானித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
    
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 10 கோடி நஷ்ட ஈடு செலுத்த வேண்டும் என்று நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் மாநாடு வியாழக்கிழமை சுதந்திர கட்சி தலைமையகத்தில் இடம்பெற்றது. இதன் போது மேற்கண்டவாறு தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் நான் முன்னரே அறிந்திருக்கவில்லை என்பதை ஆரம்பம் முதலே தெரிவித்து வந்தேன். எனினும் ஊடகங்களும் மக்களும் அதனை நம்பவில்லை. தற்போது நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பில் இது குறித்து நான் அறிந்திருக்கவில்லை என்பது தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தாக்குதல்கள் இடம்பெறுவதற்கு முன்னர் நான் வெளிநாடு செல்ல ஆயத்தமான போது கூட, என்னுடனிருந்த பொலிஸ்மா அதிபரால் இது தொடர்பில் எனக்கு அறிவிக்கப்படவில்லை. இவ்விடயமும் நீதிமன்ற தீர்ப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளது. என்னால் நியமிக்கப்பட்ட உயர் அதிகாரிகளினால் இழைக்கப்பட்ட தவறுக்காக நான் குற்றவாளியாக்கப்பட்டுள்ளேன் என்பதே இந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது என்னை சிறையிலடைக்க வேண்டும் எனக் கூறும் முன்னாள் இராணுவத்தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஆகியோரது காலத்தில் யுத்தத்தினால் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். தம்மையும் மக்களையும் பாதுகாத்துக் கொள்ளத் தெரியாதவர்களுக்கு என்னை சிறையிலடைக்குமாறு கூறுவதற்கு அதிகாரமில்லை. தற்போதுள்ள மற்றும் இனிவரப் போகும் அனைத்து ஜனாதிபதிகளுக்கும் இதன் மூலம் சிறந்த படிப்பினையைப் பெற்றுக் கொள்ள முடியும்.

நீதிமன்ற தீர்ப்பிற்கமை 10 கோடி செலுத்தக் கூடிய பொருளாதார இயலுமை எனக்கு இல்லை. நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஊழல் மோசடிகளில் ஈடுபடவில்லை. சுமார் 30 ஆண்டுகள் அரசியலில் ஈடுபடுகின்ற போதிலும், எனக்கு சொந்தமான ஒரு மோட்டார் சைக்கிள் கூட கிடையாது. எனவே நாடளாவிய ரீதியிலுள்ள எனது ஆதரவாளர்களான மக்களிடமிருந்து பணத்தை சேகரித்து அதனையே நான் நஷ்டஈடாக செலுத்த தீர்மானித்துள்ளேன்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!