சஜித், டக்ளசுடனும் ஜெய்சங்கர் சந்திப்பு!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெயசங்கர் ஆகியோர் இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று இடம்பெற்றது.
    
இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டதுடன்,இலங்கையின் ஒட்டுமொத்த மக்களின் நலனுக்காக இந்திய அரசாங்கத்தின் தொடர்ச்சியான ஆதரவை நல்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேட்டுக் கொண்டார். இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகள் மற்றும் நட்புறவின் பேணலை நினைவு கூர்ந்த எதிர்க்கட்சித் தலைவர், இது நாளுக்கு நாள் வலுப்பெற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

இதேவேளை, இலங்கையின் கடல் வளத்திற்கும், இலங்கை கடற்றொழிலாளர்களுக்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ள, இந்திய கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய சட்டவிரோத தொழில் செயற்பாடுகளை முழுமையாக கட்டுப்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் நிறைவேறுவதற்கும், இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார சவால்கள் உட்பட அனைத்து சவால்களையும் எதிர்கொள்வதற்கும் இந்தியாவின் உணர்வுபூர்வமான ஒத்துழைப்பு அவசியம் எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ். ஜெயசங்கருக்கும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம், கடற்றொழில் அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றது. இதன்போதே, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் குறித்த வேண்டுகோள்கள் முன்வைக்கப்பட்டன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!