3 மாதங்களுக்குள் காணிகள் விடுவிப்பு!

யாழ் மாவட்டத்தில் திணைக்களங்கள் மற்றும் பாதுகாப்பு தரப்பால் கையகப்படுத்தப்பட்ட பொதுமக்களின் காணிகளை சட்டபூர்வமாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலகத்தின் சமூக விவகாரங்களுக்கான பணிப்பாளர் நாயகம் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

காணிவிடுவிப்பு தொடர்பாக யாழ் மாவட்ட செயலகத்தில் அரச அதிபர் தலைமையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. கலந்துரையாடலின் முடிவில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வனவள தினைக்களத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள காணிகள் தொடர்பில் களவிஜயம் ஒன்றும் அதிகாரிகளால் மேற்கொள்ளப்படவுள்ளது. யாழ்ப்பாண மாவட்டங்களில் விடுவிக்கப்படாத பல காணிகள் காணப்படுகிறன. எனவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடக்கு பகுதியில் உள்ள காணிகளிற்கு தீர்வு காண முயற்சிகளை எடுத்து வருகிறார்.

அதற்காக யாழ்ப்பாண மாவட்ட செயலாளர், காணி குறித்த அதிகாரி, வனத்துறை அதிகாரிகள், என அனைவரையும் வரவைத்து மக்களிற்கான காணிகளை விடுவிக்கவும், இராணுவத்தினரிடம் உள்ள 80 ஏக்கர் நிலப்பரப்புடைய காணிகளை சட்டபூர்வமாக பெறுவதற்கு பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.
அதிக காணி பிரச்சினை உள்ளது. வனத்துறை அமைச்சிற்கு கீழ் உள்ள காணிகளை சட்ட பூர்வமாக விடுவித்துக் கொள்ள நாங்கள் உத்தேசித்துள்ளோம்.

பிரச்சினைகள் உள்ள காணிகளை விடுவித்து உரிய மக்களிற்கு காணிகளை விவசாயத்திற்கும், கட்டடங்களை கட்டுவதற்கும் வழங்க வேண்டும். மற்றும் அரசாங்க தேவைகளிற்கும் கட்டிடங்கள் அமைப்பதற்கும் சட்ட பூர்வமாக காணிகளை வழங்க வேண்டும். குறைந்த பட்சம் 3 மாத காலத்திற்குள் இப் பிரச்சினைகளை நிவர்த்தி செய்து காணிகளை கையளிக்க உள்ளோம். இக் காணி பிரச்சினை குறித்த 4வது தடவையான கலந்துரையாடலே இது.

இன்றைய கலந்துரையாடலில் இறுதி கட்ட மக்களின் காணி பிரச்சினைகள் குறித்து பேச முடிந்தது. காணிகள் தொடர்பான 40 பிரச்சினைகள் பற்றி 3 மணித்தியாலங்களிற்கு மேல் பேசப்பட்டது. எனவே இவ் காணி பிரச்சினை குறித்த வேலை திட்டங்கள் 3 மாத காலத்திற்குள் தீரும் என நம்புகிறேன்.
அதேபோல பாதுகாப்பு துறையும் அடுத்த வாரங்களில் காணி பிரச்சனைகளை விடுவித்து தருவதாக கூறி உள்ளனர்.- என்றார்.

நேற்று பிற்பகல் யாழ் மாவட்ட அரச அதிபர் சிவபாலசுந்தரன் தலைமையில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில், ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் இளங்கோவன், வடக்கு மாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன, மேலதிக அரசா அதிபர்(காணி) முரளி, மேலதிக அரச அதிபர் பிரதீபன், வனவள திணைக்கள அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள் மறும் ஜனாதிபதி செயலக அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர். மேலும் இணையவழியூடாக கொழும்பைச் சேர்ந்த முக்கிய அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!