ரணிலுக்கு எதிராக போராட்டம் நடத்திய இருவருக்கு நீதிமன்ற கட்டளை!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் யாழ். வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இடப்பெற்ற போராட்டத்தில் கலந்துகொண்ட வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க வவுனியா மாவட்ட செயலாளர் மற்றும் யாழ். பல்கலைக்கழக மாணவன் ஆகியோரை யாழ் நீதிவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நேற்று கட்டளை வழங்கப்பட்டுள்ளது. குறித்த நீதிமன்ற கட்டளையை காவல்துறையினர் நேற்று சம்பந்தப்பட்டவர்களிடம் வழங்கியுள்ளனர்.

கடந்த பொங்கல் தினத்தன்று ஜனாதிபதி ரணிலின் யாழ்ப்பாண வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதி வழிப்போராட்டம் இடம்பெற்றது. காவல்துறையினர் அதைத் தடுக்க முற்பட்டபோது அங்கு பதற்ற நிலை ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து 17 ஆம் திகதி தவத்திரு வேலன் சுவாமிகள் குறித்த கூட்டத்தில் கலந்து கொண்ட காரணத்தை முன்வைத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருத்தார்.

குறித்த வழக்கு விசாரணை எதிர்வரும் 31 ஆம் திகதி தவணையிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், நேற்று வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க வவுனியா மாவட்ட செயலாளர் சிவானந்தன் ஜெனிட்டா மற்றும் யாழ். பல்கலைக்கழக மாணவன் மனோகரன் சோமபாலன் ஆகியோரை அன்றைய தினம் யாழ்ப்பாண நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கட்டளை வழங்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு எதிராக 3 குற்றச்சாட்டுக்கள் காவல்துறையினரால் முன்வைக்கப்பட்டுள்ளன.
சட்டவிரோதமான முறையில் கூட்ட உறுப்பினராக இருந்தமை, காவல்துறை உத்தியோகத்தர்களின் கடமைக்கு இடையூறு செய்தமை, கல்லால் எறிந்து காவல்துறை உத்தியோகத்தருக்கு காயம் ஏற்படுத்தியமை போன்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!