ஸ்பெயின் பிரதமருக்கு வெடிக்கும் கடிதங்களை அனுப்பிய முதியவர்!

ஸ்பெயின் பிரதமர் மற்றும் உக்ரைன் தூதரத்திற்கு வெடிக்கும் கடிதங்களை அனுப்பிய நபரின் வீட்டில் வெடிகுண்டு பட்டறை கண்டுபிடிக்கப்பட்டது. ஸ்பெயினில் 74 வயது முதியவர் ஒருவரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்தனர். கடிதங்கள் மூலம் வெடிகுண்டுகளை ஸ்பெயின் பிரதமர் Pedro Sánchez மற்றும் உக்ரேனிய தூதரகத்திற்கு அவர் அனுப்பியதாக குற்றம்சாட்டப்பட்டது.
    
அதனைத் தொடர்ந்து அவரது வீட்டை பொலிஸார் சோதனையிட்டபோது, வெடிகுண்டுகளை தயாரிக்கும் பட்டறை கண்டுபிடிக்கப்பட்டது. குறித்த நபரிடம் கடித வெடிகுண்டுகளை தயாரிப்பதில் நுணுக்கமான திட்டமிடல் இருந்தது தெரிய வந்தது. அந்நபர் மீதான குற்ற ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டன. அவற்றில், பயங்கரவாத நோக்கங்களுக்காக வெடிபொருட்களை தயாரித்து பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது. மேலும் இரண்டு குற்றங்கள் அரசாங்க உறுப்பினர்களை உள்ளடக்கியதால் மோசமானவை என வகைப்படுத்தப்பட்டன.

இதுகுறித்து உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘குறித்த நபர் சமூக வலைப்பின்னல்களில் மிகவும் சுறுசுறுப்பாக இருந்தார் மற்றும் தேசிய பொலிஸ் புலனாய்வாளர்களின் கூற்றுப்படி, அவருக்கு தொழில்நுட்ப மற்றும் கணினி நிபுணத்துவம் உள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், அவர் தனியாக வெடிகுண்டுகளை தயாரித்து அனுப்பியதாக கருதப்பட்டாலும், மற்ற நபர்களின் பங்கேற்பை பொலிஸார் நிராகரிக்கவில்லை.

நவம்பர் மாதத்தின் பிற்பகுதியிலும், டிசம்பர் மாதத்தின் தொடக்கத்திலும் ஸ்பெயினின் பல்வேறு தளங்களுக்கு ஆறு கடித குண்டுகள் அனுப்பப்பட்டாலும், அதிர்ஷ்டவசமாக யாரும் அதில் கொல்லப்படவில்லை. ஆனால் உக்ரேனிய தூதரக ஊழியர் ஒருவர் பொதிகளில் ஒன்றை திறக்கும்போது லேசான காயம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!