கனடாவில் இந்து கோவில் மீது தாக்குதல்!

கடந்த வாரங்களில் அவுஸ்திரேலியாவில் உள்ள 3 கோவில்களில் அடுத்தடுத்து நடந்த தாக்குதலைத் தொடர்ந்து, இப்போது கனடாவில் உள்ள இந்து கோவில் ஒன்றில் இந்தியாவுக்கு எதிரான வாசகங்களை எழுதி அவமதிப்பு செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் சமீப காலங்களாக இந்து மத கோவில்கள் மீது தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த வாரங்களில் அவுஸ்திரேலியாவில் மதவெறி சார்ந்த தாக்குதல்கள் அதிகரித்து காணப்படுகின்றன.
    
இந்நிலையில், கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில், பிராம்ப்டன் நகரத்தில், கௌரி சங்கர் மந்திர் என்று அழைக்கப்படும் ஒரு பிரபலமான இந்து கோவிலில், இந்திய சமூகத்திற்குள் சீற்றத்தைத் தூண்டும் வகையில் இந்தியாவுக்கு எதிரான வாசகங்கள் (கிராஃபிட்டி) எழுதப்பட்டுள்ளன.

இது குறித்து, இன்று வெளியிட்ட அறிவிப்பில், வெறுக்கத்தக்க வகையிலான இந்த செயல்கள், கனடாவில் வசிக்கும் இந்து சமூகத்தினரின் உணர்வுகளை வெகுவாக புண்படுத்தியுள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக கனேடிய அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், இந்திய வம்சாவளியினர் சார்பாக வருத்தங்களையும் தெரிவித்து கொண்டுள்ளதாக்க அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் காலிஸ்தான் இயக்கம் ஈடுபட்டு இருக்க கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. இதுபற்றி கனடா நாட்டு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். பிராம்ப்டன் நகர மேயர் பேட்ரிக் பிரவுன், கவுரி சங்கர் இந்து கோவில் அவமதிப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் தனது ட்விட்டரில், “எங்களது நகரிலோ அல்லது நாட்டிலோ வெறுப்புணர்வை தூண்டும் வகையிலான தாக்குதலுக்கு இடம் கிடையாது. இதுபற்றி போலீசாரிடம் விசாரிக்க கூறியுள்ளேன். ஒவ்வொருவரும் அவர்களுடைய வழிபாட்டு தலத்தில் பாதுகாப்புடனான உணர்வுடன் இருக்க செய்வோம்” என கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!