ஐஎம்எவ் உதவி மார்ச்சுக்குள் கிடைக்காவிட்டால் நெருக்கடி மோசமாகும்!

சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி எதிர்வரும் மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்காவிட்டால், நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிகள் மேலும் தீவிரமடையும் என்று வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். அல்ஜஸீரா செய்தி சேவைக்கு வழங்கிய நேர்காணலொன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கேள்வி : கடன் மறுசீரமைப்பிற்காக கடன் மீள் செலுத்தல் காலத்தை மேலும் இரு வருடங்கள் நீடிப்பதாக சீன எக்ஸிம் வங்கி தெரிவித்துள்ளது. எவ்வாறிருப்பினும் அது போதுமான காலம் அல்ல. எனவே இவ்விடயம் தொடர்பிலும் , ஏனைய சலுகைகளைப் பெற்றுக் கொள்வது தொடர்பிலும் சீனாவுடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றீர்கள் அல்லவா?

பதில் : இல்லை. வேறு நிவாரணங்களைப் பெற்றுக் கொள்ளல் தொடர்பில் எவ்வித பேச்சுவார்த்தைகளிலும் நாம் ஈடுபடவில்லை.

கேள்வி : அவ்வாறெனில் வேறு ஏதேனும் நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளனவா?

பதில் : கடன் தொடர்பில் வேறு எந்த நிபந்தனைகளும் முன்வைக்கப்படவில்லை. எனினும் சில விடயங்கள் தொடர்பில் சீனாவுடன் இதுவரையில் இறுதி இணக்கப்பாடு எட்டப்படவில்லை. எவ்வாறிருப்பினும் சீனாவுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து விரைவில் இறுதி கட்டத்தை எட்ட முடியும் என்று எதிர்பார்க்கின்றோம்.

கேள்வி : சீனாவுடன் இணக்கப்பாட்டை எட்டுவதற்கு இன்னும் காணப்படும் காரணிகள் எவை?
பதில் : உண்மையில் இங்கு காணப்படும் பிரச்சினை யாதெனில் சீனா வழங்கியுள்ள கால அவகாசத்திற்கும் , சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கும் இடையில் காணப்படும் சிறு சிறு வேறுபாடுகளாகும். எனவே அனைத்து தரப்பினரையும் ஒரே மேசைக்கு அழைத்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது.

அனைத்து தரப்பினரும் ஒரே நிலைப்பாட்டை எட்டுவர் என்று எதிர்பார்க்கின்றோம். இதற்காக எம்மால் முன்னெடுக்கப்பட வேண்டிய மேலும் சில நடவடிக்கைகள் உள்ளன. எம்மால் அவற்றை செய்ய முடியும் என்ற நம்பிக்கை காணப்படுகிறது.

கேள்வி : இதனை எந்தளவு காலப்பகுதிக்குள் செய்து முடிக்க முடியும் என்று எண்ணுகின்றீர்கள்?
பதில் : வெகுவிரைவில் முடிக்கவே எதிர்பார்க்கின்றோம்.

கேள்வி : இலங்கையால் தொடர்ந்தும் எந்தளவு காலத்திற்கு பொறுத்துக் கொண்டிருக்க முடியும்? இது கிடைக்கப் பெறாவிட்டால் இலங்கையின் நிலைமை மேலும் கடினமானதாகுமல்லவா?
பதில் : ஆம். நாம் இதனை மிகத் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கின்றோம். இவ்வாண்டின் முதற் காலாண்டுக்குள் , அதாவது மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கப் பெறாவிட்டால் அது நெருக்கடி மிக்கதாகும். எனவே அதற்கு முன்னர் சாதகமான பதிலைப் பெற்றுக் கொள்ளவே முயற்சிக்கின்றோம். எமது மறுசீரமைப்புக்களை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் சென்றால் , இலங்கை மக்கள் அதனை உணர்ந்து கொண்டால் , மத்திய வங்கியின் அந்நிய செலாவணி இருப்பை பேணினால் , சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தால் நிலைமை அந்தளவிற்கு மோசமடையாது.

கேள்வி : நாணய நிதியத்தின் கடனுதவி கிடைக்கப் பெறாவிட்டால் நீங்கள் எவ்வாறு அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவீர்கள்? இதற்காக நிதியை எவ்வாறு திரட்டுவீர்கள்?
பதில் : அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக நாம் நாணய நிதியத்திடமிருந்து கடனுதவியைப் பெறவில்லை. மாறாக அதற்காக நாம் எமது வருமானத்தை அதிகரித்துள்ளோம். வரி அதிகரிப்பின் ஊடாக நாம் கடந்த ஆண்டை விட இவ்வாண்டு 50 சதவீதத்தினால் வருமானத்தை அதிகரித்திருக்கின்றோம் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!