சட்டவிரோத ஆட்கடத்தல் பொறியில் சிக்கியுள்ள இலங்கை பட்டதாரிகள் : திடுக்கிடும் தகவல்

இலங்கையைச் சேர்ந்த பட்டதாரிகள் சட்டவிரோத ஆட்கடத்தல் பொறியில் சிக்கியுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தென்கிழக்காசியாவின் பாரிய திட்டமிட்ட குற்றச் செயல்களின் மையமாக கருதப்படும் லாவோஸில் இந்த இலங்கைப் பட்டதாரிகள் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொழில் வாய்ப்பு பெற்றுக்கொள்ளும் நோக்கில் சென்றுள்ள இலங்கையர்கள் சட்டவிரோதமான செயற்பாடுகளில் ஈடுபடுத்தப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சீன ஹாக்கின் மென்பொருள் மற்றும் மேம்படுத்தப்பட்ட மொழிபெயர்ப்பு மென்பொருள் என்பனவற்றை பயன்படுத்தி அமெரிக்கப் பிரஜைகளை ஏமாற்றும் திட்டமிட்ட ஓர் மோசடி இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக 37 வயதுக்கும் மேற்பட்ட அமெரிக்கப் பிரஜைகளை இலக்கு வைத்து இந்த மோசடிகள் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. Hinge, Boo, Tinder மற்றும் POF.com போன்ற அமெரிக்க டேடிங் செயலிகளை ஹேக் செய்து மோசடிகள் இடம்பெறுவதாக தெரியவந்துள்ளது.

தனியொரு தங்குமிடத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கைப் பட்டதாரிகள் உள்ளிட்டவர்கள் நாள் ஒன்றுக்கு 5 அமெரிக்கப் பிரஜைகளின் தொலைபேசி எண்களை பெற்றுக்கொள்ள வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அவ்வாறு பெற்றுக் கொள்ளத் தவறுவோருக்கு மின்சார அதிர்ச்சி, 100 புஷ்அப், 100 ஸ்குவாட் போன்ற தண்டனைகள் விதிக்கப்படுவதாக அங்கு சிக்கியுள்ள ஜே என்ற புனை பெயரைக் கொண்டு இலங்கையர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு தொலைபேசி இலக்கங்களைப் பெற்றுக் கொண்டு அமெரிக்கப் பிரஜைகளுடன் நட்புறவாகியதன் பின்னர் அவர்களை ஏமாற்றி அவர்களை சட்டவிரோத செயற்பாளுக்கு முதலீடு செய்யச் செய்து அந்தப் பணத்தை அபகரிப்பதே இந்த கும்பலின் இலக்காக காணப்படுகின்றது.
இந்த மோசடி நடவடிக்கைகள் பாரிய அளவில் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!