துமிந்தசில்வாவுக்கான பொது மன்னிப்பை இரத்து செய்யுமாறு ஹிருணிகா கோரிக்கை

அரசியலமைப்பின் 34 (1) சரத்தின் ஏற்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள விதிகளை பின்பற்றாமைக் காரணமாக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கான, ஜனாதிபதியின் பொது மன்னிப்பை இரத்து செய்யுமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் அவரது தாயார் சுமனா பிரேமச்சந்திர ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர். நேற்றைய தினம் (07.02.2023) தமது சட்டத்தரணிகள் ஊடாக உயர் நீதிமன்றில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பின் சட்டபூர்வமான தன்மையை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் தொடர்பில் வாய்மூலமாக சமர்ப்பணங்களை சமர்ப்பித்த போது, ஹிருணிகா பிரேமச்சந்திர சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனும், சுமனா பிரேமச்சந்திர சார்பில் ஆஜரான சட்டத்தரணி எராஜ் டி சில்வாவும் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர்.

அரசியலமைப்பின் 43ஆம் சரத்தின் விதியில் குறிப்பிடப்பட்டுள்ள வழக்கு விசாரணை நீதிபதிகளின் அறிக்கை, சட்டமா அதிபரின் கருத்து மற்றும் நீதியமைச்சரின் பரிந்துரையை கருத்தில் கொண்டு துமிந்த சில்வாவிற்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்படவில்லை என சட்டத்தரணி எராஜ் டி சில்வா நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளார்.

குற்றச்செயல்களில் பாதிக்கப்பட்டவர்களுடன் கலந்தாலோசிக்காத காரணத்தினால் இயற்கை நீதிக்கு முரணாக ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக நீதிமன்றில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்றுமொரு மனுதாரர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ஜெப்ரி அழகரத்தினம், துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட மன்னிப்பு நியாயமற்றது, தன்னிச்சையானது, சட்டத்தின் ஆட்சியை சீர்குலைக்கும் மற்றும் நீதி நிர்வாகம் மீதான மக்களின் நம்பிக்கையை இழக்கச் செய்யும் என்று கூறினார்.


இந்த சமர்ப்பணங்களை அடுத்து மனுக்களை எதிர்வரும் மார்ச் மாதம் 20ஆம் திகதி வாதத்திற்கு எடுத்துக் கொள்வதாக உயர் நீதிமன்ற நீதியரசர்களான ப்ரீத்தி பத்மன் சூரசேன, காமினி அமரசேகர மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் தீர்மானித்துள்ளது. முன்னதாக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி பதவியை வகிக்காத காரணத்தினால் இந்த வழக்கின் பிரதிவாதியாக சேர்க்கப்பட்டிருந்தார். துமிந்த சில்வாவை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் சிறைக் காவலில் வைக்குமாறு குற்றப்புலனாய்வுத்துறைக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவை 2022 மே 31 அன்று பிறப்பித்தது.

அத்துடன், துமிந்த சில்வாவின் கடவுச்சீட்டை முடக்கி நீதிமன்றம் இடைக்கால உத்தரவையும் பிறப்பித்தது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர, அவரது தாயார் சுமனா பிரேமச்சந்திர மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் கஸாலி ஹுசைன் ஆகியோர் துமிந்த சில்வாவின் ஜனாதிபதி மன்னிப்பு சட்டத்தில் செல்லாது என அறிவிக்குமாறு கோரி இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!