நீண்ட இடைவேளைக்கு பின் பொதுமக்கள் முன் தோன்றிய கிம்!

நீண்ட 36 நாட்களுக்கு பின்னர் முதன்முறையாக பொதுமக்கள் முன்பு தோன்றிய வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன், போருக்கு தயாராக வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். மிகப்பெரிய ராணுவ அதிகாரிகள் சந்திப்பின் போது பேசிய கிம் ஜோங் உன், வடகொரிய ராணுவம் வளர்ச்சியின் புதிய கட்டத்தை நோக்கி நகர்கின்றது என்றார். நிகரற்ற இராணுவ பலத்தை வெளிக்காட்டியுள்ளதாக குறிப்பிட்ட கிம் ஜோங் உன், வடகொரியாவின் ஒவ்வொரு வெற்றிக்கும் ராணுவத்தின் பங்கு குறிப்பிடத்தக்கது என்றார்.
    
ராணுவத்தில் மிகப்பெரிய மாறுதல்களை முன்னெடுக்க வேண்டும் எனவும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. மட்டுமின்றி ஏவுகணை தொடர்பில் புதிய துறை ஒன்றையும் கிம் ஜோங் உன் நிறுவியுள்ளார்.

இந்த துறை தான் இனி எதிர்கால ஏவுகணை சோதனைகள் மற்றும் விரிவாக்கத்தை முன்னெடுக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, வடகொரியாவின் புதிய ஏவுகணை துறை தொடர்பில் தாங்கள் கவனம் செலுத்தி வருவதாக தென் கொரியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஒரு மாதத்துக்கும் மேலாக கிம் ஜோங் உன் வெளியுலகில் காணாததால் அவரது உடல்நிலை குறித்து ஊகங்கள் நிலவி வந்தன. மட்டுமின்றி ஞாயிற்றுக்கிழமை தனது மூன்றாவது பொலிட்பீரோ கூட்டத்தைத் தவறவிட்டார்.

கடந்த ஆண்டு தொடர் ஏவுகணை சோதனைகளை வடகொரியா முன்னெடுத்தது. மட்டுமின்றி, தங்கள் நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக எந்த நாட்டின் அனுமதியும் தங்களுக்கு தேவையில்லை என வெளிப்படையாகவும் அறிவித்திருந்தது.
      

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!