கூட்டமாக அர்ஜென்டினாவுக்கு படையெடுக்கும் நிறைமாத கர்ப்பிணிகள்!

சமீப மாதங்களில் 5,000க்கும் மேற்பட்ட ரஷ்ய கர்ப்பிணிகள் அர்ஜென்டினாவுக்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் அதன் உண்மை பின்னணி தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மகப்பேறுக்கு ஒருவார காலமே எஞ்சியிருக்கும் நிலையில் பல பெண்கள் அர்ஜென்டினாவுக்கு சென்றுள்ளனர். பிறக்கும் தங்கள் பிள்ளைகளுக்கு அர்ஜென்டினா குடியுரிமையை பெறவே கர்ப்பிணிகள் கூட்டமாக அந்த நாட்டுக்கு செல்வதாக கூறப்படுகிறது.

இருப்பினும், உக்ரைன் போர் காரணமாக, ரஷ்யாவில் எப்போது எதுவேண்டுமானாலும் நடக்கலாம் என்ற நிலையில் கர்ப்பிணிகள் அர்ஜென்டினாவுக்கு சென்றிருக்கலாம் எனவும் கூறுகின்றனர்.
வியாழக்கிழமை மட்டும் ஒரே விமானத்தில் 33 கர்ப்பிணிகள் அர்ஜென்டினாவுக்கு சென்றுள்ளனர்.

இதில் உரிய ஆவணங்கள் இல்லாத நிலையில் மூன்று பெண்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அர்ஜென்டினாவுக்கு செல்வது வெறும் சுற்றுலா நோக்கத்தில் மட்டுமே என ரஷ்ய பெண்கள் கூறி வந்தாலும், அவர்களின் நோக்கம் அதுவல்ல என அவர்களின் நடவடிக்கையும் செயல்பாடுகளும் இருப்பதாக உள்ளூர் அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.

ரஷ்ய பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கு அர்ஜென்டினா குடியுரிமை வேண்டும் என்று விரும்புகின்றனர், ரஷ்ய கடவுச்சீட்டை விட அதிக மதிப்பு கொண்டது அர்ஜென்டினா கடவுச்சீட்டு என்பது அவர்களுக்கு தெரியும் என்கிறார்கள் ஒருதரப்பினர்.

அர்ஜென்டினா கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் விசா ஏதுமின்றி 171 நாடுகளுக்கு செல்லல்லாம், ஆனால் ரஷ்ய கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களால் 87 நாடுகளுக்கு மட்டுமே விசா இன்றி செல்ல முடியும்.

மட்டுமின்றி, உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்கு பின்னர் மேற்கத்திய நாடுகளுக்கு ரஷ்ய மக்கள் பயணப்படுவது சிக்கலாக உள்ளது. மேலும் ரஷ்யர்களுக்கு சுற்றுலா விசா அளிக்க பல எண்ணிக்கையிலான நாடுகள் மறுத்தும் வருகிறது.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மட்டுமின்றி, ரஷ்ய எல்லையை பகிர்ந்து கொள்ளும் நாடுகளும் விசா அளிக்க தயக்கம் காட்டி வருகிறது. இந்த நிலையில் தான், ரஷ்ய கர்ப்பிணி பெண்கள் சில குழுக்களிடம் சுமார் 5,000 முதல் 15,000 டொலர்கள் கட்டணமாக செலுத்தி, அர்ஜென்டினாவுக்கு செல்கின்றனர்.

2015 முதலே இந்த திட்டம் ரகசியமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. சில குழுக்கள் மொத்த ஆவணங்களும் தயார் செய்வதுடன், குடியுரிமையும் பெற்றுத்தரும் பொருட்டு 35,000 டொலர்கள் வரையில் கட்டணமாக வசூலிக்கின்றனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.