அந்நிய செலாவணி வருமானம் 69 வீதம் அதிகரிப்பு!

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களால் அனுப்பப்படும் அந்நிய செலாவணி கடந்த ஆண்டு ஜனவரியை விட இவ்வாண்டு ஜனவரியில் 68.8 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது. இதே போக்கு தொடருமாயின் இவ்வருட இறுதியில் 7 பில்லியன் டொலருக்கும் அதிக அந்நிய செலாவணியை ஈட்ட முடியும் என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
    
வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், டொலர் நெருக்கடியின் காரணமாகவே மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த வீழ்ச்சியடைந்த நிலைமை படிப்படியாகவே சீராகி வருகின்றது.

கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தை விட இவ்வாண்டு ஜனவரியில் வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களால் அனுப்பப்படும் அந்நிய செலாவணி 68.8 வீதத்தினால் அதிகரித்துள்ளது. இது 500 மில்லியன் டொலரை அண்மித்துள்ளமை சாதகமான சமிஞ்ஞையாகும்.

தற்போது இது தொடர்ந்தும் அதிகரித்த போக்கிலேயே காணப்படுகிறது. இதே நிலைமை காணப்படுமாயின் இவ்வருட இறுதிக்குள் 7 பில்லியன் டொலருக்கும் அதிக அந்நிய செலாவணியை ஈட்ட முடியும் என்று வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. இவ்வாறான நிலைமை ஏற்படும் பட்சத்தில் மருந்து தட்டுப்பாடு ஏற்படாது.

எவ்வாறிருப்பினும் தற்போதைய நிலைமையில் அந்நிய செலாவணி இருப்பு 2 பில்லியனை விட அதிகரிக்கவில்லை. இவற்றில் சுகாதாரம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்காகவே அதிக செலவுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அதன் அடிப்படையிலேயே சத்திர சிகிச்சைகளை முன்னுரிமை அடிப்படையில் காலம் தாழ்த்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சர் அறிவித்துள்ளார். எவ்வாறிருப்பினும் இது அவரால் தனித்து எடுக்கப்பட்ட தீர்மானம் அல்ல. வைத்திய நிபுணர்களுடன் கலந்தாலோசித்தே அமைச்சரவை இதனை அறிவித்துள்ளார் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!