எமது எதிர்கால சந்ததியினருக்காக நீர்வளத்தை பாதுகாக்க வேண்டும்: அமைச்சர் ஜீவன் தொண்டமான்

எமது எதிர்கால சந்ததியினருக்காக நீர்வளத்தை பாதுகாக்க வேண்டியது எம் அனைவரினதும் தலையாய கடமையாகும் என நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

நீர் முகாமைத்துவம் தொடர்பில் தற்போது நிலவும் பிரச்சினைகளால் நீர் வீண்விரயமாவதுடன், நீர் மாசடைதலும் அதிகரித்துள்ளது என இதன்போது அவர் குறிப்பிட்டுள்ளார். தேசிய நீர் கொள்கைத்திட்டமொன்றை உருவாக்குவதற்கான கலந்துரையாடல் மகாவலி அதிகார சபையில் அண்மையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்,

இந்த கலந்துரையாடலின் போது நீர்வழங்கல் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஆலோசனை வழங்கியுள்ளார். இதன்போது தேசிய நீர் கொள்கையொன்றை உருவாக்குவதற்கு உரிய தரப்பினருக்கு பொறுப்புக்களையும் வழங்க தீர்மானம் எடுக்கப்பட்டது. மேலும், பஸ்னாகொட நீர்த்தேக்கத் திட்டம் மற்றும் நிலத்தடி நீர்த்தேக்கத் திட்டம் ஆகியவற்றின் தற்போதைய முன்னேற்றம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

இந்த கலந்துரையாடலில் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க, நீர்வழங்கல் அமைச்சின் செயலாளர் எஸ்.சமரதிவாகர, நீர்பாசன அமைச்சின் செயலாளர் யூ.டி.சி. ஜயலால், தேசிய நீர் வழங்கல் சபையின் தலைவர் என். ரணதுங்க, இலங்கை மகாவலி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் கீர்த்தி பி. கொடகம, நீர்ப்பாசன திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பொறியியலாளர் டி.பி.திரிமஹாவிதான, நீர் வழங்கல் சபையின் முகாமையாளர் திருமதி. வசந்த இளங்கசிங்க உட்பட அதிகாரிகள் பலரும் பங்கேற்றிருந்தனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!