தேர்தல் திகதியை உடன் அறிவிக்க வேண்டும்!

உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கான திகதி அறிவிப்பதை மேலும் தாமதிக்காமல் தேர்தல் ஆணைக்குழு உடனடியாக திகதி பிரகடனப்படுத்த வேண்டும். அத்துடன் தேர்தலுக்கான பணத்தை நிதி அமைச்சு விநியோகிக்காவிட்டால் அது நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்துக்கு ஆளாகும் என மக்கள் விடுதலை முன்னணியின் ஊடக பேச்சாளர் பாராளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.
    
உயர் நீதிமன்ற உத்தவுக்கு பின்னரும் இதுவரை தேர்தல் ஆணைக்குழு உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்தும் திகதி அறிவிக்காமல் இருப்பது தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். தேர்தலுக்காக வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள நிதியை விடுவிக்குமாறு உயர்நீதிமன்றம் நிதி அமைச்சுக்கும் அமைச்சின் செயலாளருக்கும் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. அதனால் இவர்களுக்கு தற்போது நிதியை விடுவிக்காமல் இருக்க முடியாது. நீதிமன்ற உத்தரவுக்கு நிச்சயமாக கட்டுப்பட்டே ஆகவேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் நீதிமன்ற உத்தரவை மீறியதாக தெரிவித்து, அதிகாரிகளுக்கு எதிராக சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்க முடியும்.

அத்துடன் தற்போது தேர்தல் ஆணைக்குழுவுக்கு இருக்கும் பொறுப்பு உடனடியாக தேர்தலுக்கான திகதியை அறிவிப்பதாகும். அதற்கு காலம் தாழ்த்துவதற்கு எந்த தேவையும் இல்லை. நிதி அமைச்சின் செயலாளர், அரச அச்சக கூட்டுத்தாபனத்தின் பிரதானி ஆகியோருடன் கலந்துரையாடிக்கொண்டிருக்க எந்த தேவையும் இல்லை. இவர்களுடன் கலந்துரையாட வேண்டும் என தெரிவிப்பது மேலும் காலம் தாழ்த்துவதாகும். அதனால் உடனடியாக உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கான திகதியை தேர்தல் ஆணைக்குழு பிரகடனப்படுத்த வேண்டும். அது ஆணைக்குழுவின் பொறுப்பாகும்.

அதேபோன்று கடமையாகும். அதனை அவர்கள் செய்தே ஆக வேண்டும். கலந்துரையாடல்களை மேற்கொள்வதன் மூலம் மேலும் காலதாமதம் ஏற்படுகிறது. தேர்தல் ஆணைக்குழு தேர்தலுக்கான திகதியை அறிவித்தால், நிதி அமைச்சு அதற்கான பணத்தை வழங்கவேண்டும். இது தற்போது நீதிமன்ற உத்தரவின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் உள்ளூராட்சி மன்ற தேர்தலை பிற்போடுவதற்கு எந்த தேவையும் இல்லை என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!