தென் கொரியாவில் ஆயிரம் நாய்களை பட்டினி போட்டு கொடூரமாக கொன்ற நபர்!

தென் கொரியாவில் ஆயிரம் நாய்களை கூண்டில் அடைத்து, பட்டினி போட்டு நபர் ஒருவர் கொடூர கொலை செய்து உள்ளார். தென் கொரியாவின் வடமேற்கே அமைந்த கியாங்கி மாகாணத்தில் யாங்பியாங் நகரில் வசித்து வரும் நபர் ஒருவர் தனது வளர்ப்பு நாயை காணவில்லை என வீடு, வீடாக சென்று தேடி உள்ளார். அப்படி சென்றபோது வீடு ஒன்றில் நாய்கள் அடைத்து வைக்கப்பட்டு, கொடுமைப்படுத்தப்பட்ட நிகழ்வை பார்த்து அதிர்ந்து போனார். இதுபற்றி கேர் என்ற விலங்குகள் உரிமை குழு ஆர்வலர்களுக்கு தகவல் சென்றது.

இதனை தொடர்ந்து நடந்த சோதனையில் வீட்டின் பின்புறத்தில் கூண்டுகள், சாக்கு பைகள் மற்றும் ரப்பர் பெட்டிகளில் ஆயிரக்கணக்கில் அழுகிய நிலையிலான நாய்களின் உடல்கள் கிடந்து உள்ளன.
உயிருடன் இருந்த சில நாய்களும் தோல் நோய்களால் பாதிக்கப்பட்டும், சத்து பற்றாக்குறையால் மெலிந்த நிலையிலும் காணப்பட்டன. நாள்பட்ட அந்த அழுகிய உடல்கள் சேர்ந்து ஒரு படிவம் போன்று தரையில் படர்ந்து இருந்து உள்ளது.

அந்த வீட்டில் இருந்த 60 வயது நபர், கைவிடப்பட்ட நாய்களை, சங்கிலி கொண்டு கட்டி போட்டு, பட்டினி போட்டு உயிரிழக்க செய்து உள்ளார். 2020-ஆம் ஆண்டில் இருந்து மூன்றாண்டுகளாக இது தொடர்கிறது என தெரியவந்துள்ளது. எனினும், விலங்குகள் உரிமை குழு ஆர்வலர்கள் கூறும்போது, வர்த்தக ரீதியாக பலன் தராதவை என தெரிந்ததும் அவற்றின் உரிமையாளர்கள், பராமரிப்புக்கான தொகையை கொடுத்து வந்து உள்ளனர். ஆனால், அவற்றை வாங்கி கொண்டு, நாய்களை அடைத்து, பட்டினி போட்டு கொலை செய்து உள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!