ஐஎம்எவ் நிபந்தனைகளால் கடும் நெருக்கடி ஏற்படும்!

சர்வதேச நாணய நிதியத்தின் (ஐஎம்எப்) ஒப்பந்தத்துக்கமைய நாம் செயற்படும் போது மிகக் கடுமையான பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். அதேவேளை, அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி அதிகரித்துள்ளதால் எரிபொருட்களின் விலைகள் மற்றும் மின்சார கட்டணங்கள் கணிசமான விகிதத்தில் குறைக்கப்படலாம் என்றும் குறிப்பிட்டார்.

இலங்கை கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறியதாலும், இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் மற்றும் எரிபொருள் நுகர்வு குறைக்கப்பட்டதாலும் அமெரிக்க டொலருக்கான தேவை குறைந்துள்ளதால் ரூபாய்க்கு எதிராக அமெரிக்க டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.
வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்ட கடன்களை இலங்கை செலுத்த ஆரம்பித்து, இறக்குமதி கட்டுப்பாடுகளை இரத்து செய்து இறக்குமதியை அனுமதித்தால் டொலர் மீண்டும் உயரும் என்றும் குறிபப்பிட்டார்.

இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை பெற்றோலிக் கூட்டுத்தாபனம் ஆகியவை இப்போது பாரிய இலாபத்தை ஈட்டுகின்றன என்றும் சம்பிக்க எம்.பி குறிப்பிட்டார். எனினும், எரிபொருள் மற்றும் நிலக்கரியை இறக்குமதி செய்வதற்கான விலை மனுக்கோரல் நடைமுறை மிகவும் ஊழல் நிறைந்ததாக இருப்பதாகக் கூறுவது வருத்தமளிக்கிறது என்றார். மேலும், சர்வதேச நாணய நிதியம் தீர்மானம் செய்யும் கடன் தரநிலைகளின்படி நமது உள்ளூர் கடன் வழங்குபவர்கள் மற்றும் வெளிநாட்டு கடன் வழங்குபவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று குறிப்பிட்டார்.

அதில் பல முக்கிய பிரச்சினைகள் எழுகின்றன என்றும் சில கடனளிப்பவர்கள் தாங்கள் சர்வதேச பல கடன் வழங்குபவர்கள் என்று தங்களிடம் கூறியுள்ளதாகவும் ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கியின் கடன்கள் மறுசீரமைக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!