ஐஎம்எவ் உடன்படிக்கையை நடைமுறைப்படுத்த ஆதரவளிக்குமாறு ஜனாதிபதி ரணில் கோரிக்கை!

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் நோக்கில் அரசியல் வேறுபாடுகளை புறந்தள்ளி சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையை நடைமுறைப்படுத்த ஆதரவளிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்க்கட்சிகளிடம் கோரிக்கை விடுத்தார்.

கடந்த காலத்தை விமர்சிப்பது தனது பணியல்ல என்றும், நாட்டை கட்டியெழுப்புவதே தனது பணி எனவும் வலியுறுத்திய ஜனாதிபதி, கடந்த கால தவறுகள் மீண்டும் ஏற்படாத வகையில் சட்டதிட்டங்கள் மற்றும் பின்னணியை வகுத்து, எதிர்காலத்தை கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயல்படுவதாகவும் தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதியை பெற்றுக்கொள்வது தொடர்பில் இன்று காலை பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றியபோதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டைக் காப்பாற்றாமல், ராஜபக்ஷவினரைக் காப்பாற்றுவதே தனது நோக்கம் என்று பலர் குற்றஞ்சாட்டினாலும், இலங்கை கடினமான தொங்கு பாலத்தைக் கடக்க தான் பணியாற்றியதை சர்வதேச சமூகம் ஏற்றுக்கொண்டுள்ளது என்றும் ஜனாதபதி தெரிவித்தார்.
தான் பிறந்து, வளர்ந்து, கல்வி கற்ற நேசத்துக்குரிய நாட்டை மீளக் கட்டியெழுப்புவதில் தனக்கு நம்பிக்கை இருப்பதாக மேலும் தெரிவித்த ஜனாதிபதி, கடந்த கால அனுபவங்கள் பலவும் அந்த நம்பிக்கையை உறுதிப்படுத்தியதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையை பெற்றுக்கொள்வது தாய்நாட்டை மீண்டும் உயர்த்துவதற்கான சந்தர்ப்பம் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், அதன் ஊடாக நாட்டிலுள்ள இளைஞர் யுவதிகளின் எதிர்காலத்தை கட்டியெழுப்ப புதிய பாதை திறக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

பணவீக்கம் காரணமாக முழு சமூகமும் எதிர்கொண்டுள்ள அழுத்தங்கள் தொடர்பில் தமக்கு சரியான புரிதல் இருப்பதாகத் தெரிவித்த ஜனாதிபதி, இந்த சிரமங்கள் தற்காலிகமானவை என்றும், தற்போதைய முயற்சிகள் மற்றும் அர்ப்பணிப்புக்கான பலன்களை மக்கள் விரைவில் பெறுவார்கள் என்றும் தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையை பெற்றுக்கொள்வதற்காக அனைத்து சிரமங்களையும் அழுத்தங்களையும் தாங்கிய நாட்டு மக்கள் அனைவருக்கும் ஜனாதிபதி இந்த சந்தர்ப்பத்தில் நன்றி தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!