ஓரினச்சேர்க்கைக்கு எதிரான சட்டத்திற்கு ஒப்புதல்: பிரதமர் ட்ரூடோ கண்டனம்!

ஓரினச்சேர்க்கைக்கு எதிரான சட்டத்திற்கு உகாண்டாவில் ஒப்புதல் அளித்துள்ளதற்கு, கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கண்டனம் தெரிவித்துள்ளார். உகாண்டா நாட்டில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு எதிரான சில சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி சில குற்றங்களுக்கு மரண தண்டனை மற்றும் LGBTQ+ என அடையாளம் காண்பவர்களுக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அந்நாட்டின் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர் அசுமான் பசலிர்வா, ஓரினச்சேர்க்கை எதிர்ப்பு மசோதா 2023ஐ நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தினார்.

இந்த நிலையில் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘ஓரினச்சேர்க்கைக்கு எதிரான சட்டம் என்று அழைக்கப்படும் உகாண்டா பாராளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்ட சட்டம் பயங்கரமானது மற்றும் அருவருப்பானது – யாரும், எங்கும் அவர்கள் யார் அல்லது யாரை விரும்புகிறார்கள் என்பதற்காக பயந்து வாழ வேண்டியதில்லை. உகாண்டாவின் அரசியல் பிரமுகர்கள் இந்த சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று நாங்கள் கடுமையாக வலியுறுத்துகிறோம்’ என தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!