ஆதிசிவன் ஆலயத்தை மீண்டும் அமைக்க அமைச்சரவையில் முடிவாம்!

துஷ்டர்களினால் சின்னா பின்னமாக்கப்பட்ட நெடுங்கேணி ஆதிசிவன் ஆலயத்தை விரைவில் மீண்டும் அமைப்பது தொடர்பாக அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டு உள்ளதாகவும், அதற்கு ஜனாதிபதி மற்றும் அமைச்சர்கள் ஆதரவாக இருப்பதாக அமைச்சர் டக்ளஸ் கடற்றொழில் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
    
கிளிநொச்சி நகர பஸ் நிலையத் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய போதே மேற்குறிப்பிட்ட விடயத்தைத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இன – மத ரீதியான வன்முறைகளுக்கு தற்போதைய அரசாங்கம் இடமளிக்காது என்றார். அமைச்சர் ஜீவன் தொண்டமானும் தன்னோடு இணைந்து வெடுக்குநாறி விவகாரம் தொடர்பாக அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு வந்ததாகவும் சுட்டிக்காட்டினார்.

அதேபோன்று, நெடுந்தீவு வெடியரசன் கோட்டை பகுதியில் காட்சிப்படுத்தப்பட்ட தொல்லியல் சின்னம் பற்றிய அறிவிப்பு பலகை தொடர்பாக உரிய தரப்புக்களுடன் கலந்துரையாடிய நிலையில், குறித்த அறிவிப்பு பலகை தற்போது நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!