இலங்கை முஸ்லிம்கள் மீதும் தற்போது திரும்பியுள்ள இனவாதம்! கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

தமிழர்களைத் தொடர்ந்து இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை கேள்விக்கு உள்ளாக்காத இலங்கை முஸ்லிம்கள் மீதும் தற்போது இனவாதம் திரும்பியுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
ஐ.நா. மனிதவுரிமைச் சபையின் 52ஆவது அமர்வில்  இனவாதம்‘ தொடர்பான விவாதத்தில் உரையாற்றும் போதே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், திட்டச் செயற்பாட்டுக்கான டேர்பன் பிரகடனத்தின் 79ஆவது பந்தியில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது:

இனத்துவ பாகுபாட்டினைக் களைதல் மற்றும் இனத்துவ சமநிலையைப் பேணுதல் ஆகியவற்றில் உள்ள தடைகள், அரசியல் விருப்பு இன்மை, பலவீனமான சட்டங்கள், சட்டத்தினை காத்திரமான முறையில் நடைமுறைப்படுத்துவதில் நாடுகளிடம் காணப்படும் மூலோபாயக் குறைபாடுகள் ஆகியவற்றிலேயே முதன்மையாகத் தங்கியிருக்கிறது என நாம் உறுதியாக நம்புகிறோம்.

அதுபோன்று  நாடுகளில் காணப்படும் இனரீதியான நிலைப்பாடு, இனங்களை எதிர்மறையான வகைப்படுத்தலுக்கு உள்ளாக்குதல் போன்றவையும் இந்நிலைக்கு காரணமாக அமைகின்றன.
இலங்கையில் உள்ள நிலவரம் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளவற்றை மெய்யாக்குகிறது.

1948இல் நாடு பிரித்தானிய காலனித்துவத்திலிருந்து விடுபட்டுக் கொண்டதன் பின், மாறிமாறி வரும் அரசாங்கங்கள் இனத்துவ அடிப்படையிலும் இனத்துவ பாகுபாட்டுடனான கொள்கைகளையே கடைப்பிடித்து வருகின்றன. இவ்வரசாங்கங்கள் தமிழ் மக்கள் விடயத்தில் எதுவித சகிப்பதன்மையுமின்றி, இலங்கைதீவில் அவர்கள் தனித்துவமான ஒரு தேசமாக வாழ்வதனை கட்டமைப்பு ரீதியாக சிதைத்து அழிப்பதனையே குறியாகக் கொண்டு செயற்பட்டு வருகின்றன.

தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்தவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட போது, இலங்கை அரசாங்கங்கள் தாம் கடைப்பிடித்துவரும் இனரீதியான பாகுபாட்டுடனான நிலைப்பாடு மேற்கொண்டு வரும் இனவழிப்பு சார்ந்த நடவடிக்கைகள் மீதான கவனத்தைத் திசை திருப்பி தமிழர்களின் போராட்டத்தை பயங்கரவாதமாகவும் தமிழ் மக்களை பயங்கரவாதத்திற்கு ஆதரவானவர்களாகவும் காட்டின.

2009இல் தமிழ் மக்களின் ஆயுதப்போராட்டமானது இனவழிப்புடன் முள்ளிவாய்க்காலில் முறியடிக்கப்பட்டதன் காரணமாக, எதிர்த்து நிற்கும் ஆற்றலை தமிழ் மக்கள் இழந்துவிட்டதாக இலங்கை அரசாங்கம் திருப்தியடைந்துள்ளது. தமிழர்களைப் போலன்றி, இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை கேள்விக்கு உள்ளாக்காத இலங்கை முஸ்லிம்கள் மீதும் தற்போது இனவாதத்தைத் திருப்பியுள்ளது.

இது தொடர்பில் மேலதிகமான ஆதாரங்கள் வேண்டுமெனில், மக்களை அடிமைப்படுத்தும் வகையிலான சமகால நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் விடயத்திற்கு பெறுப்பான ஐ.நாவின் சிறப்பு அதிகாரி, இலங்கை மலையகத்தில் வாழும் தமிழ்ச் சமூகத்தினர் இவ்வாறு நடத்தப்படுவதாக தமது முடிவுரையில் கூறியிருக்கிறார். எனவே இலங்கை அரசாங்கம் என்ற புற்றுநோயை எதிர்கொள்வதற்கு எப்போது இந்த உலகம் விழித்துக் கொள்ளும் என கேள்வி எழுப்பியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!