தமிழ்த் தேசிய அரசியல் செய்கிறவர்களால் மட்டுமே எதிர்த்துப் போராட முடியும்!

இன்று வடக்கு – கிழக்கில் பல இடங்களிலே நில அபகரிப்புகள் இடம்பெற்றுக் கொண்டுவருகிறது, தொல்பொருள் திணைக்களத்தின் மூலமாக திட்டமிட்டு புத்தர் சிலைகள் வைக்கப்பட்டு கொண்டிருக்கிறது, இவற்றை எதிர்த்துப் போராடக்கூடியவர்கள் இலங்கை தமிழரசு கட்சியும் தமிழ்த் தேசிய அரசியல் செய்கிறவர்கள் மட்டுமே என ப.அரியநேந்திரன் தெரிவித்துள்ளார்.
    
மட்டக்களப்பில் இருக்கக்கூடிய ராஜாங்க அமைச்சர்கள் எவரும் நில அபகரிப்பை தடுப்பதற்கான வழிகளை செய்ய மாட்டார்கள் எனவும் தெரிவித்தார். தேர்தல் காலங்களில் மட்டும் கிழக்கை மீட்போம் என வாக்குறுதி வழங்குபவர்கள், உண்மையில் வாய் மூடி மௌனியாக இருக்கிற துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

மேலும், தந்தை செல்வா அவர்கள் எந்த நோக்கத்துக்காக இலங்கை தமிழரசு கட்சியை ஆரம்பித்தாரோ அந்த நோக்கத்தை அடையும் வரை அதனுடைய பயணம் தொடரும் எனவும் தெரிவித்தார். தமிழ் தேசிய அரசியலில் இருக்கிற அனைவரும் ஒன்று இணைந்து ஒரு குடையின் கீழ் நின்று எமது மண்ணையும் மக்களையும் மீட்டெடுப்பதற்கு உறுதி எடுப்போம் எனவும் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!