கிளிநொச்சியில் இனவழிப்புக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம்! சிறீதரன் அழைப்பு

கிளிநொச்சியில் இனவழிப்புக்கு எதிரான அடையாள கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி சேவைச்சந்தை வளாகத்தில் நாளைய தினம் (19.04.2023) காலை 9 மணியளவில் இந்த போராட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த போராட்டத்தின் நோக்கம் தேசிய இனப்பிரச்சினைக்கு அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை வழங்க வலியுறுத்தல் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு சர்வதேச நீதியைப் பெற்றுக்கொடுத்தல், அரசியல் கைதிகளின் விடுதலையை துரிதப்படுத்த வலியுறுத்தல் என்பனவாகும்.

இதேவேளை சமகாலத்தில் இலங்கை தொல்பொருளியல் திணைக்களம் மற்றும் அதனோடு இணைந்த அரச திணைக்களங்களால், வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் கட்டமைக்கப்பட்ட இன, மத ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும்.

அத்துடன் அட்டைப் பண்ணைகள், இறால் பண்ணைகள் அமைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களின் கடல்வள அபகரிப்பைக் நிறுத்துவதுடன், சீன நாட்டின் முதலீட்டாளர்களுக்கு கிளிநொச்சியின் காணிகளைத் தாரைவார்ப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இலங்கை தமிழரசு கட்சி, கிளிநொச்சி மாவட்டக் கிளையால்  கவனயீர்ப்பு போராட்டமானது மேற்கொள்ளப்படும். இந்த எதிர்ப்பு போராட்டத்தில் அனைத்து தரப்பினரும் கலந்து கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். 

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!