கனடாவில் பிரபலமான கலைச்சிற்பத்திற்குள் சிக்கித் தவித்த நபர்!

கனடாவின் மிகவும் பிரபலமான பொது கலைப்படைப்புகளில் ஒன்றில் ஏற முயன்ற நபர் அதனுள் சிக்கிக்கொண்ட வேடிக்கையான சம்பவம் நடந்துள்ளது. கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் உள்ள எட்மண்டனில், கடந்த வாரம் மிகவும் பிரபலமான ஒரு உலோக சிற்பத்தின் உள்ளே ஏறி, அதில் சிக்கித் தவித்த 26 வயதான வக்கீம் கோர்டோரில் (Wakeem Courtoreille) என்பவருக்கு பொலிசார் 5,000 கனேடிய டொலர் அபராதம் விதித்தனர்.
    
1,000 துருப்பிடிக்காத எஃகு கோளங்களால் உருவாக்கப்பட்ட தாலஸ் டோம் (Talus Dome) கலைப்படைப்பிற்குள், வக்கீம் கோர்டோரில் எட்டிப் பார்த்துள்ளார். அப்போது அவர் எப்படியோ உள்ளே நுழைந்து பார்க்கும்போது அதனுள் விழுந்து சிக்கிக்கொண்டார்.

பல மணிநேரமாக அவர் ஓட்டைகள் வழியாக வெளியே வர முயன்றுள்ளார். ஆனால், அவரால் முடியாததால், அருகில் செல்பவர்களை கத்தி கூச்சலிட்டு அழைத்து உதவி கேட்டுள்ளார். பின்னர் உதவி செய்யவந்த ஒரு பார்வையாளர் அவசர உதவி எண்ணிற்கு அழைத்துள்ளார்.

பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், தீயணைப்புத் துறையின் தொழில்நுட்ப மீட்புக் குழு உட்பட மூன்று குழுக்களுக்கு சுமார் ஒன்றரை மணிநேரம் போராடி வக்கீமை வெளியேற்றினர்.
பின்பு அவரது குறும்புத்தனத்திற்காக குற்றம்சாட்டப்பட்டு, அவருக்கு 5000 கண்டிய டொலர் அபராதம் விதித்தனர் பொலிஸார்.

வக்கீம் அந்த கலைப்படைப்பிற்குள், ஒரு எலி கூண்டுக்குள் மாட்டிக்கொண்டு அலைமோதுவதுபோல், பயத்தில் இங்கும் அங்கும் ஓடித் தெரிந்ததாக அவர் நேரில் பார்த்த ஒருவர் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!