புதிய அமைச்சர்கள் நியமனம் – வதந்தி என்கிறார் பந்துல!

புதிய அமைச்சுப்பதவிகள் வழங்கப்படவுள்ளதாகக் கூறப்படுகின்றமை போலியான வதந்திகளாகும். எவ்வாறிருப்பினும் தேவையேற்படின் அமைச்சரவையில் திருத்தங்களை மேற்கொள்வதற்கும், புதிய நியமனங்களை வழங்குவதற்கும் ஜனாதிபதிக்கு அதிகாரம் உண்டு என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
    
எதிர்க்கட்சியிலிருந்து பலர் அரசாங்கத்துடன் இணையவுள்ளதாகவும், அவர்களுக்கு அமைச்சுப்பதவிகள் வழங்கப்படவுள்ளதாகவும் பரவலாகக் கூறப்படுகிறது. எதிர்க்கட்சியினருக்கு அமைச்சுப்பதவிகள் வழங்கப்பட்டால் தாமும் அதில் உள்வாங்கப்பட வேண்டும் என்று பொதுஜன பெரமுனவினர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் இது குறித்து செவ்வாய்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கேட்கப்பட்ட போதே அமைச்சர் மேற்கண்டவாறு பதிலளித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை வதந்திகளாகும். இவ்வாறான வதந்திகள் குறித்து அமைச்சரவையில் அவதானம் செலுத்தப்படுவதில்லை. அமைச்சரவை நியமனமொன்று வழங்கப்படுமானால் அது குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நாட்டுக்கு அறிவிக்கப்படும்.

அதற்கமைய புதிய நியமனங்களை வழங்குவதற்கும் , அமைச்சரவையில் மாற்றங்களை மேற்கொள்வதற்கும் ஜனாதிபதிக்கும் அதிகாரம் காணப்படுகிறது. இந்த அதிகாரத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் அமைச்சரவை அனுமதியைப் பெற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!