அமெரிக்காவில் சிறை கைதியை உயிருடன் தின்ற மூட்டைப்பூச்சிகள்?

அமெரிக்காவில் சிறையில் இருந்த கைதி ஒருவரை மூட்டைப்பூச்சிகள் உயிருடன் தின்றதாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், அமெரிக்காவைச் சேர்ந்த 35 வயது லாஷான் தாம்சன் என்ற நபர், 2022-ம் ஆண்டு ஜூன் 12 ஆம் திகதி அட்லான்டாவில் ஒரு குற்றச் செயலில் ஈடுபட்டதற்காகக் கைதுசெய்யப்பட்டு கவுன்ட்டி சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
    
அங்கு அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது பரிசோதனைகளுக்குப் பின்னர் தெரியவர, அவர் மனநலப் பிரிவில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்ட நிலையில், செப்டம்பர் 13, 2022 அன்று, தாம்சன் தனது சிறை அறையில் நினைவிழந்த நிலையில் எந்தவித சலனமும் இன்றி கிடந்திருக்கிறார்.
இதனையடுத்து அவருக்கு சி.பி.ஆர் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் அந்த முயற்சி தோல்வியடைந்ததை அடுத்து, அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டார்.

இந்த நிலையில் தாம்சனின் வழக்கறிஞர், “மூட்டைப்பூச்சிகள் அவரை உயிருடன் தின்றதால்தான், அவர் இறந்துவிட்டார்” என குற்றம் சுமத்தியுள்ளார். உயிரிழந்தவரின் குடும்பத்தினர் இந்த வழக்கு தொடர்பாகக் குற்றவியல் விசாரணை நடத்த வேண்டும் என்றும், அந்தச் சிறையை மூடிவிட்டு, தரமானதாக மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருக்கின்றனர்.

இது குறித்து தாம்சன் குடும்பத்தினரின் வழக்கறிஞர் மைக்கேல் டி.ஹார்பர் கூறுகையில், , “தாம்சன் வைக்கப்பட்டிருந்த சிறை சுகாதாரமற்று மூட்டைப்பூச்சிகள் நிறைந்திருந்தன. அவரை மூட்டைப் பூச்சிகள் உயிருடன் தின்றிருக்கின்றன. அவருக்கு இத்தகைய கொடூரமான சாவு நிகழ்ந்திருக்கக் கூடாது என தெரிவித்துள்ளார்.

தாம்சனுக்கு மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின்படி, அவரின் உடலில் எந்தக் காயங்களும் இல்லை. ஆனால். கடுமையான மூட்டைப் பூச்சி தொற்று இருந்ததற்கான அறிகுறிகள் தெரிகின்றன. எனினும் அவரின் மரணத்துக்கான காரணம் இன்னும் உறுதிசெய்யப்படவில்லை என்றார்.

அதேவேளை இது தொடர்பாக ஃபுல்டன் கவுன்ட்டி ஷெரஃப் அலுவலகம் விடுத்த அறிக்கையில், “தாம்சனின் மரணம் குறித்து முழு விசாரணை தொடங்கப்பட்டிருக்கிறது. மூட்டைப்பூச்சிகள், பேன்கள், பிற பூச்சிகளின் தொல்லைகளைத் தீர்க்க 5,00,000 டாலர் பயன்படுத்தி சிறையை மேம்படுத்தல் மற்றும் பாதுகாப்புச் சுற்றுகளுக்கான நெறிமுறைகளைப் புதுப்பித்தல் உட்பட சிறையில் அதிகாரிகள் உடனடி நடவடிக்கைகளை எடுத்துவருகின்றனர்.

மேலும், தற்போது இருக்கின்ற சிறையின் பாழடைந்த நிலையை மாற்றி அதை
ப் புதுப்பித்து, மேம்படுத்தி, சுகாதாரமான முறையில் மாற்றும் எங்கள் இலக்குக்கான பயணம் மிகவும் எளிதானது அல்ல .

இந்த வழக்கில் வேறு ஏதேனும் கிரிமினல் குற்றம் நிகழ்ந்திருக்கிறதா என்ற பாணியிலும் விசாரணை நடத்தப்படும்” என குறிப்பிடப்பட்டுள்ளது. கைதி உயிரிழந்தமை தொடர்பில் கென்டக்கி பல்கலைக்கழகத்தின் பூச்சியியல் நிபுணர் மைக்கேல் பாட்டர் ,

“பொதுவாக மூட்டைப்பூச்சிகள் மரணத்தை உருவாக்கும் அளவுக்குக் கொடியது அல்ல. ஆனால், சில அரிதான சந்தர்ப்பங்களில், நீண்டகாலமாக அதிகமான மூட்டைப்பூச்சிகளின் தொல்லைக்கு ஆளானால், அது கடுமையான ரத்த சோகையை ஏற்படுத்தும். சிகிச்சையளிக்கப்படாவிட்டால் அது ஆபத்தானது. ஏனெனில் இந்த மூட்டைப்பூச்சிகள் ரத்தத்தை உண்கின்றன” என பிபிசி-யிடம் கூறியிருக்கிறார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!