நகைச்சுவை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள தேர்தல்!

இலங்கையில் தேர்தல் என்பது நகைச்சுவையான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ராேஹன ஹெட்டியாரச்சி தெரிவித்தார்
    
ஜனநாயகத்துக்கான சிவில் சமூக கூட்டமைப்பு வியாழக்கிழமை கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
உள்ளூராட்சி மன்ற தேர்தல், அரசியலமைப்புக்கும் தேர்தல் சட்டத்துக்கும் எதிராக சட்டரீதியில் அல்லாமல் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் சர்வதேச சமூகம் இதுதொடர்பாக பெரிதளவில் குரல்கொடுப்பதை காணக்கூடியதாக இல்லை.

எமது நாட்டு பிரச்சினைகளை நாட்டு மக்களே கலந்துரையாடி தீர்த்துக்கொள்ள வேண்டி இருக்கிறது. தனால்தான் சிவில் அமைப்புகளை ஒன்றிணைத்துக்கொண்டு, மக்களை அடக்கும் சட்டமூலங்களை வாபஸ்பெற்றுக்கொள்ள அரசாங்கத்துக்கு அழுத்தங்களை பிரயோகிக்க முயற்சி்க்கிறோம்.

அத்துடன் இலங்கையில் தேர்தல் என்பது நகைச்சுவையான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்த 4தடவைகள் திகதி அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த 4 சந்தர்ப்பங்களும் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன.தேர்தலுக்கான திகதி அறிவிப்பு செய்ய முடியாத நிலைக்கு தேர்தல் ஆணைக்குழுவை அரசாங்கம் நிர்க்கதிக்குள்ளாகி இருக்கிறது.

உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்த சட்டத்தின் பிரகாரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் இருக்கிறது. அரசியலமைப்பு மற்றும் தேர்தல் சட்டத்தின் பிரகாரம் தேர்தல் நடத்தப்படவேண்டும். ஆனால் தற்போது தேர்தல் இடம்பெறுவது தாமதித்திருக்கிறது.

நிறைவேற்று அதிகாரிக்கு தேவையான முறையிலேயே நாட்டில் தேர்தல் இடம்பெறவேண்டும் என்ற செய்தியே தற்போது எமக்கு வழங்கப்பட்டிருக்கிறது. எதிர்வரும் காலத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவதா, பாராளுமன்ற தேர்தலை நடத்துவதா என நிறைவேற்று அதிகாரியே தீர்மானித்து அறிவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. அதனால் ஆட்சியாளருகளுக்கு தேவையான முறையில் நாட்டை வழி நடத்துவதையே நாங்கள் தற்போது காண்கிறோம்.

அத்துடன் நாட்டின் பொருளாதார பிரச்சினை இருப்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். பொருளாதாரத்தை கட்டியெழுப்பு அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும். ஆனால் இந்த பொருளாதார நெருக்கடி நாங்கள் ஏற்படுத்தியது அல்ல. ஆட்சியாளர்களே நாட்டில் உரப்பிரச்சினையை ஏற்படுத்தினார்கள், எரிபொருள், எரிவாயு பிரச்சினையை ஏற்படுத்தினார்கள் தற்போது அதற்கு தீர்வை தேடுகின்றனர்.

அதனால் மக்களின் பிரச்சினைக்கு தீர்வை காண்பதற்கு தங்களுக்கு தேவையான முறையில் நாட்டை ஆட்சி செய்ய இடமளிக்குமாறு இவர்களுக்கு தெரிவிக்க முடியாது. இவர்களின் முறையற்ற நிர்காத்தினாலே இந்த பிரச்சினைகள் ஏற்படுவதற்கு காரணமாகும். அதனால் அரசாங்கத்தின் இவ்வாறான தீர்மானங்களுக்கு எதிராக மக்கள் வீதிக்கிறங்கும்போது அதனை தடுப்பதற்கே பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலங்கள் போன்ற சட்டங்களை கொண்டுவர அரசாங்கம் முயற்சிக்கிறது

மேலும் அரசாங்கம் வர்த்தமானிப்படுத்தி இருக்கும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் எதிர்வரும் 25ஆம் திகதி பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்க இருப்பதாக தெரியவருகிறது. இந்த சட்டமூலத்தை அவ்வாறே நிறைவேற்றிக்கொள்வதா அல்லது அதில் திருத்தங்கள் மேற்கொள்வதா என்பது பாராளுமன்ற உறுப்பினர்களின் தீர்மானத்திலேயே இருக்கிறது. அதேநேரம் குறித்த சட்டமூலத்துக்கு எதிராக நீதிமன்றம் சென்றால், நீதிமன்றம் இது தொடர்பாக ஆராய்ந்து சில விடயங்களை நீக்குமாறு தெரிவிக்க இடமிருக்கிறது.

இருந்தபோதும் குறித்த சட்டமூலத்தை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்து அனுமதித்துக்கொள்ள முன்னர், அதுதொடர்பாக பரந்தளவிலான சமூக கலந்துரையாடல் ஏற்படுத்தப்படவேண்டும். அதற்காக சாதாரண காலவரைக்கு இடமளிக்கப்பட வேண்டும்.

ஏனெனில் இந்த சட்டம் ஏற்படுத்தப்படுவது ஆட்சியாளர்களின் இயலாமையின் அடிப்படையிலாகும். நாட்டின் ஆட்சியாளர்களின் ஆட்சி வெற்றியளித்திருந்தால், நாட்டில் போராட்டம், பேரணிகள் இடம்பெறுவதில்லை. தொழிற்சங்க போராட்டம் அதிகரிப்பது என்பது ஆட்சியாளர்களின் தோல்வியாகும்.

எனவே ஆட்சியாளர்களின் தோல்வியை சமூகத்துக்கு கொண்டுவந்து கலந்துரையாடுவதை தடுப்பதற்கே தற்போது பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் அரசாங்கத்தின் பிழையான தீர்மானங்களுக்கு எதிராக மக்கள் குரல் எழுப்புவதை தடுப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.

அதனால் உத்தேச பயங்கரவாத தடைச்சட்டமூலம் தற்போது உள்ளவாறு அனுமதிக்கப்பட்டால் எதிர்காலத்தில் இவ்வாறான ஊடக சந்திப்புகளை நடத்தி கலந்துரையாட முடியாத நிலை ஏற்படும் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!