இலங்கையில் மீண்டும் நடைமுறைக்கு வரும் கோவிட் கட்டுப்பாடுகள்

இலங்கையில் மீண்டும் கோவிட் கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வரவுள்ளன.
கோவிட் தொற்றுக்குள்ளான 7 பேர் நேற்றைய தினமும் 4 பேர் நேற்று முன்தினமும் (24.04.2023) அடையாளம் காணப்பட்டுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது இலங்கையில் கோவிட் நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை குறைவாக இருந்த ஒரு காலத்திற்குப் பிறகு மீண்டும்  ஏற்பட்டுள்ளமையினால் அதிக அவதானம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதன் காரணமாக சுகாதார ஆலோசனைகளை தொடர்ந்து பின்பற்றுவது மிகவும் அவசியம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன ஆலோசனை வழங்கியுள்ளார்.

பலர் கோவிட் நோய் தொற்று பற்றி மறந்துவிட்டதால், பயணத்தின் போது முகக்கவசம் அணிவது, சவர்க்காரம் பயன்படுத்தி கைகளை தவறாமல் கழுவுதல் மற்றும் சமூக இடைவெளியைப் பேணுதல் போன்ற சுகாதார பழக்கங்களை அவர்கள் மறந்துவிட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

சிறு குழந்தைகளை நெரிசலான இடங்களுக்கு அழைத்துச் செல்வதைத் தவிர்க்குமாறு பெற்றோர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார். 


* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!