ஒப்பந்தத்தை மறைத்த அரசு இப்போது அனுமதி கோருவது ஏன்?

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் குறித்து முன்னர் பாராளுமன்றத்துக்குத் தெரியப்படுத்தப்படாத நிலையில், தற்போது சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை மாத்திரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து, அதற்கு அனுமதி கோரவேண்டியதன் அவசியம் என்ன? என்று தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வி எழுப்பியுள்ளார்.
    
நாடு வங்குரோத்து நிலையை அடைவதற்கு முன்னதாகவே சர்வதேச நாணய நிதியத்தை நாடுமாறு எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக வலியுறுத்திவந்த போதிலும், அவ்வேளையில் ராஜபக்ஷாக்கள் உள்ளிட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கூட்டணியே சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதை எதிர்த்தது.

அப்போது நாட்டை ஆட்சிசெய்த அரசாங்கம் பெருமளவுக்கு சீன சார்புக்கொள்கையைப் பின்பற்றிவந்த நிலையில், அச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்ட மேற்குலக ஆதரவுக்கட்டமைப்புக்களான ஃபிட்ச் ரேட்டிங் போன்ற கடன்தரப்படுத்தல் நிறுவனங்கள் இலங்கையைத் தரமறிக்கம் செய்தன.

அதன் விளைவாக இலங்கையால் சர்வதேச சந்தையை நாடவோ, கடன்களைப் பெற்றுக்கொள்ளவோ முடியாத நிலையேற்பட்டது. இவ்வாறானதொரு பின்னணியில் உலகளாவிய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த கட்டமைப்பாகத் திகழ்கின்ற சர்வதேச நாணய நிதியத்தை நாடாமல், இலங்கையின் சீன ஆதரவுப்போக்கை’ சமநிலைப்படுத்தமுடியாது என்ற காரணத்தினாலேயே உடனடியாக சர்வதேச நாணய நிதியத்தை நாடுமாறும் நாமும் வலியுறுத்தினோம்.

இருப்பினும் அப்போது அதனைச் செய்யாத அரசாங்கம், நாடு வங்குரோத்துநிலையை அடைந்ததன் பின்னரேயே சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்தது.
அதனையடுத்து ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றுக்கொண்ட ரணில் விக்ரமசிங்க, ஏற்கனவே சர்வதேச நாணய நிதியத்தை நாடுமாறு வலியுறுத்திய எதிர்க்கட்சிகளுடன் இணக்கமாக செயற்பட்டிருக்க வேண்டும். இருப்பினும் அதற்கு எதிர்மாறான கருத்தை முன்வைத்த ஸ்ரீலங்கா பெரமுனவுடனேயே அவர் நெருங்கிச்செயற்பட்டார்.

அதன் தொடர்ச்சியாக எந்தவொரு தரப்பினதும் இணக்கப்பாடின்றி, வெளிப்படைத்தன்மையின்றி மிகவும் பலவீனமான முறையில் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து சர்வதேச நாணய நிதியத்துடனான இறுதிக்கட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டது.

அப்பேச்சுவார்த்தைகள் குறித்து முன்னர் பாராளுமன்றத்துக்குத் தெரியப்படுத்தப்படாத நிலையில், தற்போது சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை மாத்திரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து, அதற்கு அனுமதி கோரவேண்டியதன் அவசியம் என்ன? இவ்வொப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதன் விளைவாக எதிர்வருங்காலங்களில் ஏற்படக்கூடிய பாதிப்புக்களால் மக்கள் கடும் அதிருப்தியடையும்போது, அதற்கு எதிர்க்கட்சிகளையும் பொறுப்பாளிகளாக்கும் நோக்கிலேயே ஜனாதிபதியினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.

அதேபோன்று தற்போது நாடு முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடிகளுக்கு தேசிய இனப்பிரச்சினை ஓர் முக்கிய காரணமாகும். வரவு, செலவுத்திட்டத்தின் ஊடாக கல்வி, சுகாதாரம் ஆகிய துறைகளுக்காக மேற்கொள்ளப்படும் ஒதுக்கீடுகளை விடவும் இருமடங்கான ஒதுக்கீடு பாதுகாப்புத்துறைக்கு மேற்கொள்ளப்படுகின்றது.

இருப்பினும் இதுவரையில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படவில்லை. இதுகுறித்து சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தத்தில் எந்தவொரு விடயமும் உள்ளடக்கப்படாத நிலையில், அதனை எதிர்த்து வாக்களிப்பதன் ஊடாக மாத்திரமே அவ்விடயம் தொடர்பில் மீண்டுமொரு கலந்துரையாடலுக்கான வாய்ப்பை ஏற்படுத்தமுடியும். ஆகையினாலேயே எமது கட்சி அத்தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தது.

இருப்பினும் அரசாங்கத்தின் மிகமோசமான செயற்பாடுகளுக்கு எதிராகக் கடந்த வாரம் வடக்கு, கிழக்கில் ஹர்த்தாலுக்கு அழைப்புவிடுத்த தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு, இவ்வாரம் அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்திருக்கின்றது.

ஹர்த்தால் மூலம் சுமார் 100 கோடி ரூபா வருமானத்தை இழந்தாலும்கூட, அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் தமிழ்மக்கள் தமது வலுவான எதிர்ப்பை வெளிப்படுத்தினர். அவ்வாறிருக்கையில் அந்த ஹர்த்தாலுக்கு அழைப்புவிடுத்த கட்சி இவ்வாறு செயற்படுவதனாலேயே, இவற்றை வெறும் பம்மாத்து நடவடிக்கைகள் என்று நாம் கூறுகின்றோம் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!