தமிழர் பிரச்சினைக்கான முறையான தீர்வு சுயநிர்ணய உரிமையே!

தமிழ் மக்களின் பிரச்சினைக்கான முறையான தீர்வு சுய நிர்ணய உரிமையே என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
    
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர், 13வது திருத்தச்சட்டம் எங்களுடைய பிரச்சினைக்கு தீர்வாகாது. இதை நாட்டின் ஜனாதிபதி நடைமுறை படுத்த நினைத்தால் அது தற்காலிக தீர்வே அன்றி நிரந்தரமானது அல்ல.

13இன் கீழ் ஏழு மாகாணங்களில் பெரும்பான்மையாக உள்ள சிங்களவர்கள் 2 மாகாணங்களில் பெரும்பான்மையாக உள்ள தமிழர்களை அடிமையாக நடத்துகின்றனர். தெற்கிலே ஒரு இந்து ஆலயத்தை தொல்பொருள் திணைக்களத்தினர் கண்டால் அதை கோவிலாக வடிவமைப்பார்களா? அப்படி இருக்க வடகிழக்கில் வந்து விகாரைகளை அமைப்பதற்கான காரணம் என்ன?

தமிழர் பகுதிகளில் சிங்கள ஆதிக்கத்தை நிலை நிறுத்தவே இவ்வாறான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. வெறுமனே சிங்களவர்கள் என்ற காரணத்திற்காக மாத்திரம் தமிழர் பகுதிகளில் உள்ள பௌத்த அடையாளங்களை உரிமைக் கோருவது முறையற்றது. நாட்டில் பிரச்சினைகள் ஏற்படும் போது அதை தடுப்பதற்கு பல்வேறு சட்டங்கள் காணப்படுகின்றன.
இவர்கள் பயங்கரவாத தடை சட்டம் என்ற ஒன்றை கொண்டுவந்ததன் நோக்கம் அவரது எதிரிகளை அடைத்து வைத்து அவர்களை அடக்குவதற்காகவே .” என தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!