ஐந்து மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டில்  நிலவி வரும் கடும் மழையுடனான காலநிலை காரணமாக ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பதுளை, காலி, கேகாலை, மாத்தளை மற்றும் மாத்தறை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களுக்கே குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இத் தகவலை இன்றைய தினம் (05.05.2023) தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) விடுத்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஐந்து மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை | Landslide Alert For Five Districts
மேற்குறிப்பிட்ட ஐந்து மாவட்டங்களிலுள்ள பல பகுதிகளுக்கு மஞ்சள் மற்றும் செம்மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.  ஹல்துமுல்ல, ஹாலி எல, பத்தேகம, யக்கலமுல்ல, பல்லேபொல, பசறை, எல்பிட்டிய, நாகொட, கொட்டபொல மற்றும் பஸ்கொட ஆகிய பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மண்சரிவு ஏற்படக்கூடிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மண்சரிவு ஏற்படுவதற்கு முன் ஏற்படும் அறிகுறிகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டுமெனத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.
ஐந்து மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை | Landslide Alert For Five Districts
நிலத்தில் தொடர்ந்து விரிசல்கள் ஏற்படல், ஏற்கனவே உள்ள விரிசல்கள் ஆழப்படுத்தப்படல், மரங்கள் முறிந்து விழுதல், மின் கம்பங்கள், வேலிகள் மற்றும் தொலைபேசிக் கம்பங்கள் சாய்ந்து கிடத்தல் அத்தோடு, சரிவுகளில் கட்டப்பட்ட கட்டிடங்களின் தரைகள் மற்றும் சுவர்களில் விரிசல் மற்றும் நீரூற்றுகள் திடீரென தோன்றுதல், சேற்று நீர் வெளிப்படுதல், ஏற்கனவே உள்ள நீரூற்றுகளில் அடைப்பு போன்ற அறிகுறிகள் குறித்து கவனம் செலுத்த வேண்டும். 

மேலும், மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், கனமழை தொடர்ந்தால் பாதுகாப்பான இடங்களுக்கு விரைந்து செல்ல தயாராக இருக்க வேண்டும் என்றும் பொது மக்களைத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!