மன்னருக்கு வந்துள்ள புதிய சிக்கல்!

காலனித்துவ நடவடிக்கைகளிற்காக மன்னர் சார்ல்ஸ் மன்னிப்பு கோரவேண்டும் என அவுஸ்திரேலிய செனெட்டர் லிடியா தோர்ப் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவுஸ்திரேலியா கனடா நியுசிலாந்து உட்பட 12 நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடியேற்றங்களிற்காக மன்னர் சார்ல்ஸ் மன்னிப்பு கோரவேண்டும் என கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளனர்.
    
இந்த கடிதத்தை சார்ல்ஸின் முடிசூட்டும் நிகழ்விற்கு முன்னதாக அவர்கள் அனுப்பிவைத்துள்ளனர். புதிய மன்னர் இழப்பீட்டினை வழங்கவேண்டும்,அடிமைத்தனத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளை ஏற்றுக்கொள்ளவேண்டும் பழங்குடியினரின் எச்சங்கள் மற்றும் கலைப்பொருட்களை மீள வழங்கவேண்டும் என 12 நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கடந்தகால தவறுகளை சரிசெய்வதற்கும் காலனித்துவ நீக்கம் செயல்முறையை தொடருவதற்கும் நாங்கள் ஒன்றுபட்டுள்ளோம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். செனெட்டர் தோர்ப்புடன் அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்திற்கு முதன்முதலில் தெரிவு செய்யப்பட்ட பூர்வீக குடியை சேர்ந்த பெண்ணாண நொவா பீரிசும் இந்த கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

முடியாட்சியோ அல்லது அவுஸ்திரேலிய அரசாங்கமோ காலனித்துவ செயற்பாடுகளிற்காக பொறுப்புக்கூறச் செய்யப்படவில்லை என செனெட்டர் தோர்ப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உலகில் உள்ள பிரிட்டனின் காலனிநாடுகள் அனைத்திலும் அவற்றின் பூர்வீககுடிகள் ஒடுக்குமுறைக் குள்ளாக்கப்படுவதை பிரிட்டனின் முடியாட்சி மேற்பார்வை செய்தது என அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் எங்கள் மக்களின் நிலங்கள் திருடப்பட்டமை எங்கள் கலாச்சாரங்கள் சிதைக்கப்பட்டமை போன்ற பிரிட்டிஸ் காலனித்துவத்தின் மோசமான விளைவுகளை இன்றும் நாங்கள் அனுபவிக்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

1778 இல் ஆரம்பிக்கப்பட்ட இனப்படுகொலை நடவடிக்கைகள் இன்னமும் தொடர்கின்றன பிரிட்டனின் முடியாட்சியோ அவுஸ்திரேலிய அரசாங்கமோ இதுவரை அதற்கு பொறுப்புக்கூறச் செய்யப்படவில்லை என தெரிவித்துள்ள லிடா தோர்ப் அவுஸ்திரேலியாவிற்கு மன்னர் அவசியமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் முடியாட்சியுடனான உறவை துண்டிக்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!