சிறப்பு நிபுணர்களை நாடும் ஜப்பான் மக்கள்: ஏன் தெரியுமா?

தொடர்ந்து மூன்றாண்டுகள் முகத்தை மறைத்து வாழ்ந்ததால், புன்னகைப்பதை மறந்து போனதாக கூறி சிறப்பு நிபுணர்களை நாடியுள்ளனர் ஜப்பான் மக்கள். ஜப்பான் நாடு கடந்த வாரத்தில் கொரோனா பெருந்தொற்று முடிவுக்கு வந்துள்ளதை அறிவித்துள்ளதுடன், அனைத்து கட்டுப்பாடுகளையும் விலக்குவதாக தெரிவித்துள்ளது. மட்டுமின்றி மாஸ்க் பயன்பாட்டை மார்ச் மாதத்தில் தான் முடிவுக்கு கொண்டுவந்தது.
    
இருப்பினும் பொது இடங்களில் மக்கள் தற்போதும் மாஸ்க் அணிந்தே காணப்படுகின்றனர். ஆனால் மாஸ்க் அணிவதை கைவிட்ட மக்கள் தற்போது புதிய சிக்கலை எதிர்கொள்வதாக கூறுகின்றனர்.
அதாவது எவ்வாறு புன்னகைக்க வேண்டும் என்பதை மறந்துவிட்டதாக அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். ஒருசிலர் தங்கள் புன்னகை இப்போது உண்மையானதாக வரவில்லை என்று கவலை தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் தான் பலர் சிறப்பு நிபுணர்களை நாடி, தனித்துவமாக புன்னகைக்கும் திறமையை வெளிக்கொண்டுவர முயற்சி மேற்கொண்டுள்ளனர். பலர் இயற்கையாகவே புன்னகைக்க முடியாமல், தங்கள் முகத்தை வெளிக்காட்ட தயங்குவதாகவும் கூறப்படுகிறது.

முகத்தின் பெரும்பகுதி மூடியே காணப்பட்டதால், தங்கள் முகம் பொலிவிழந்து போயுள்ளது எனவும், புன்னகைக்காமல் கண்களின் சுருக்கங்கள் ஏற்பட்டுள்ளது எனவும் பலர் குறிப்பிட்டுள்ளனர்.
இதனிடையே, புன்னகைக்க பயிற்சி அளித்துவரும் நிறுவனம் ஒன்று தற்போது அதிக வாடிக்கையாளர்களை பெற்றுள்ளதுடன் அதிக வருவாய் ஈட்டிவருவதாக தெரிவித்துள்ளது.

கொரோனா பெருந்தொற்றின் போது ஜப்பானிய மக்கள் மாஸ்க் அணியும் கொள்கையை மிகவும் பின்பற்றினர். இதன் காரணமாக இருக்கலாம் மேற்கத்திய நாடுகளை விட ஜப்பானில் தொற்று மற்றும் இறப்பு விகிதம் மிகவும் குறைவாக இருந்தது.

தற்போது மாஸ்க் அணிவது என்பது கட்டாயம் அல்ல என பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். இந்த நிலையில் ஜப்பானிய சிறப்பு நிபுணர் ஒருவர், தமது நிறுவனமூடாக 4,000 பேர்களுக்கு புன்னகைக்க பயிற்சி அளித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!