மொட்டு கட்சிக்கு சஜித் விடுத்துள்ள எச்சரிக்கை

குரூரத்தனமும், குண்டர்த்தனமும் நிறைந்த மக்கள் ஆணை இல்லாத இந்த அரசில் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்கள் நடப்பது வருத்தமளிக்கின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மொட்டுக் கட்சியின் அரசியல் தலைவர்களில் ஒருவரான கடுவலை முன்னாள் பிரதி மேயர் சந்திக்க அபேரத்ன மேற்கொண்ட தாக்குதலில் காயமடைந்த சமூக ஆர்வலரும் கடற்படைப் பொறியியலாளருமான பியத் நிகேஷலவின் உடல் நிலை குறித்துக் கேட்டறிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்றைய தினம் (12.05.2023) காலை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு விஜயம் செய்துள்ளார்.

இதன்போதே ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.  மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது, மொட்டுவின் குண்டர்களால் மேலும் தாக்கப்படவுள்ள இளைஞர்கள் என்ற பெயர்ப்பட்டியல் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

எனவே, இனிவரும் காலங்களில் அமைதி வழிப் போராட்டத்தில் ஈடுபடும் இளைஞர்கள் மீது அட்டூழியங்கள் நடந்தால் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு, இது போன்ற கொடூரமான குண்டர்த்தன அரசியலைச் செயற்படுத்தும் அனைவருக்கும் தகுதி தராதரம் பாராது அவர்களுக்கு எதிராக எடுக்கக்கூடிய அனைத்து சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படும். கடுமையான தண்டனை வழங்கப்படும்.

தற்போதைய அரசின் அதிகாரத்தைப் பயன்படுத்தி தாம் விரும்பியவாறு செயற்படலாம் என மொட்டுக் கட்சி உறுப்பினர்கள் நினைத்தால் அது தவறு. அரசியல் பழிவாங்கல்களை நாம் அங்கீகரிக்கவில்லை என்றாலும், இது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் அனைவருக்கும் அந்தஸ்து பாராமல் நாட்டின் சட்டத்தின் பிரகாரம் தண்டனை வழங்கப்படும். இவ்வாறான கோழைத்தனமான செயற்பாடுகளை ஒருபோதும் அங்கீகரிக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.  

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!