ராஜபக்ஷவினரின் தோல்விக்கு சிராணி பதவி நீக்கமே காரணம்!

2015 ஆம் ஆண்டு ராஜபக்ஷர்கள் தோல்வியடைய சிரானி பண்டாரநாயக்கவின் சம்பவம் பிரதான காரணியாக அமைந்தது என்பதை ஆட்சியாளர்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் உறுப்பினர் சரித ஹேரத் தெரிவித்தார்.
    
நாவல பகுதியில் உள்ள சுதந்திர மக்கள் சபை காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டாறு குறிப்பிட்டார். சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதிகளை பெற்றுக்கொள்ள அரசமுறை வெளிநாட்டு மற்றும் தேசிய கடன் ஆகியவற்றை மறுசீரமைக்க அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. தேசிய கடனை காலத்துக்கு ஏற்பட மறுசீரமைப்பது அரசாங்கத்தின் பொறுப்பு என சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் அரசாங்கத்திடம் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.
அரசியல்வாதிகள் மக்கள் வங்கியிடம் பெற்றுக்கொண்டுள்ள கடன் தொடர்பில் நான் தலைமைத்துவம் வகித்த கோப் குழுவில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

அரசியல்வாதிகளின் செலுத்தப்படாத கடன்களை அறவிடாமல் தேசிய கடனை மறுசீரமைத்தால் சாதாரண வைப்பாளர்கள் பாதிக்கப்படுவார்கள். தேசிய கடன் மறுசீரமைக்கப்படவுள்ளதால் கடனை திருப்பி செலுத்தாமல் இருக்க கடன் பெற்றுள்ள அரசியல்வாதிகள் அவதானம் செலுத்தியுள்ளார்கள்.ஆகவே இவ்விடயம் தொடர்பில் அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.

இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை பதவி நீக்கும் யோசனையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிதியமைச்சர் என்ற ரீதியில் அமைச்சரவையில் முன்வைத்துள்ளார்.2002ஆம் ஆண்டு 35 ஆம் இலக்க 07ஆம் அத்தியாயத்தின் பிரகாரம் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவருக்கு எதிரான குற்றப்பத்திரம் கடந்த மார்ச் மாதம் 23 ஆம் திகதி ஜனாதிபதியிடம் மின்சாரத்துறை அமைச்சரால் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த குற்றப்பத்திரம் தொடர்பில் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க கடந்த மார்ச் மாதம் 28 ஆம் திகதி நீண்ட விளக்கத்தை வழங்கியுள்ளார்.குற்றப்பத்திரம்,நீண்ட விளக்கம் ஆகியவற்றை ஆராய்ந்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கும் தீர்மானத்தை ஜனாதிபதி பாராளுமன்றத்துக்கு பொறுப்பாக்கியுள்ளார்.

நாட்டு மக்களை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் மின்சார கட்டணத்தை அதிகரிக்க எடுத்த தீர்மானத்தை இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க கடுமையாக எதிர்த்தார்.மறுபுறம் உயர்தர பரீட்சை காலத்தில் மின்விநியோக தடை அமுல்படுத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

ஆணைக்குழுவுக்கு அரசியலமைப்பால் வழங்கப்பட்டுள்ள சுயாதீனத்தன்மையை செயற்படுத்திய காரணத்தினால் இவரை பதவி நீக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.இது முற்றிலும் தவறானதொரு செயற்பாடாகும்.ஆகவே இவ்விடயம் தொடர்பில் பாராளுமன்ற உப குழு ஒன்றை ஸ்தாபித்து ஒழுக்கமான முறையில் ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டும். முன்னாள் பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்கவின் சம்பவத்தின் இரண்டாம் பாகமாக ஜனக ரத்நாயக்கவின் விவகாரம் காணப்படுகிறது.

குறுகிய அரசியல் நோக்கத்துக்காக முறையற்ற வகையில் செயற்படுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.2015 ஆம் ஆண்டு ராஜபக்ஷர்களின் அரசாங்கம் வீழ்ச்சியடைவதற்கு சிரானி பண்டாரநாயக்கவின் விவகாரம் பிரதான காரணியாக அமைந்தது என்பதை தற்போதைய ஆட்சியாளர்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றார்.
      

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!